Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/யானை மரணம்; யார் காரணம்? மூடி மறைக்கும் வனத்துறை!

யானை மரணம்; யார் காரணம்? மூடி மறைக்கும் வனத்துறை!

யானை மரணம்; யார் காரணம்? மூடி மறைக்கும் வனத்துறை!

யானை மரணம்; யார் காரணம்? மூடி மறைக்கும் வனத்துறை!

ADDED : ஜூன் 12, 2025 07:58 AM


Google News
Latest Tamil News
நமது நிருபர்

கோவை வனச்சரகம், மருதமலை அடிவாரத்தில், வனப்பகுதியை ஒட்டிய நிலத்தில், கடந்த மாதம், 17ம் தேதி மாலை, ஒரு பெண் யானை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். படுத்துக் கிடந்த யானையின் வயிற்று பகுதியில் பெல்ட் அணிவித்து, கிரேன் வாயிலாக துாக்கி நிறுத்தினர்.

இரு நாட்களாக, பெல்ட் மற்றும் கிரேன் உதவியுடன் நிற்க வைத்து ஐந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், யானை உயிரிழந்தது. பிரேத பரிசோதனையில் பெண் யானை வயிற்றில், 15 மாத சிசு உயிரிழந்த நிலையில் இருந்தது. இறப்புக்கான காரணத்தை ஆராயாமலே வனத்துறையினர் யானையுடன், உண்மையையும் சேர்த்து குழி தோண்டி புதைத்து விட்டனர் என, வன ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

மருத்துவ குழுவினரிடம் விசாரணை நடத்தாமல், பிளாஸ்டிக் கழிவு, உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களை அறிக்கையாக பதிவு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல், சக அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு முயல்வதாக, வன ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர். கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷிடம் கேட்டபோது, ''குப்பை கிடங்கை அகற்ற பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினோம்.

குப்பை கிடங்கு முழுமையாக மூடப்படும் என, கலெக்டர் தற்போது தெரிவித்துள்ளார். 'யானை கர்ப்பமாக இருப்பது, அவ்வளவு எளிதில் வெளியே தெரியாது' என டாக்டர்கள் கூறினார்கள். யானை உயிரிழப்புக்கு பிளாஸ்டிக் மட்டுமே காரணம் என கூறி விட முடியாது. யானையின் கல்லீரல், சிறுநீரகம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.

அதன் செயல்பாடுகள் நின்றதும், இதயத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவே, யானை உயிரிழப்புக்கு முக்கிய காரணம். இருப்பினும், பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்பே, காரணங்கள் தெரியவரும்,'' என்றார்.

'யானையின் வயிற்றுக்குள் சிசு இருந்தது தெரியாமல், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா' என்ற கேள்விக்கு, ''யானைக்கு சிகிச்சையளித்த டாக்டர்களிடம் பேசுங்கள்; முழு விவரங்கள் தெரியும்,'' என்றார்.

கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜிடம் கேட்டபோது, ''யானையின் இறப்பு குறித்து ஏற்கனவே டாக்டர் தெளிவாக கூறியுள்ளார்,'' என்றார். துறை ரீதியான விசாரணை தொடர்பாக கேட்டதற்கு, அவர் பதிலளிக்கவில்லை.

கானுயிர்கள் மீதும் காடுகள் மீதும் அக் கறையில்லாத கோவை மண்டல வனத் துறையினர், கால்நடை டாக்டர்களை களையெடுக்க வேண்டும்; யானைகள் இறப்பு தொடர்பாக விசாரிக்க, உயர்மட்ட குழு நியமித்து, கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதே, இப்பகுதி கானுயிர் காவலர் களின் எதிர்பார்ப்பு.

உயர்மட்ட குழு விசாரணை தேவை

தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறியதாவது: வனப்பகுதியில் டன் கணக்கில், குப்பையை தேக்கியுள்ளனர். ஓராண்டுக்கு முன், யானையின் சாணத்தில் நாப்கின் கண்டறியப்பட்டது. அதன் பிறகும் கூட நடவடிக்கை இல்லை.

வனத்துறையினர் ரோந்து செல்கிறார்கள்; கேமரா பொருத்தியிருப்பதாக சொல்கிறார்கள். பெண் யானை மட்டுமின்றி, 15 மாத சிசுவும் உயிரிழந்திருக்கிறது.

ஆடு, மாடு சினை பிடித்திருப்பதை, கிராம மக்கள் எளிதாக கண்டுபிடிக்கின்றனர். மருத்துவ குழுவினர், நான்கு நாட்கள் சிகிச்சை அளித்தும், யானை கர்ப்பமாக இருப்பதை கண்டறிய முடியவில்லையா. யானை கர்ப்பத்தை கண்டறிய உபகரணங்கள் இல்லை என, மருத்துவ குழுவினர் நழுவுகின்றனர். மருத்துவ குழுவினருக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் யானைகள் இறப்பு, கோவை மாவட்டத்தில் அதிகமாக நடக்கிறது.

சென்னை ஐகோர்ட் கிரீன் பெஞ்ச், தாமாக முன்வந்து, பெண் யானை சிசுவுடன் உயிரிழந்தது தொடர்பாக விசாரிக்க வேண்டும். யானைகள் இறப்பு தொடர்பாக விசாரிக்க, உயர்மட்ட குழுவை கோர்ட் நியமித்து, அதன் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். வன விலங்குகள் மீது அக்கறையுள்ள, நன்கு பயிற்சி பெற்ற மருத்துவர்களை வனத்துறையில் நியமிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

'ஒருவருக்கு கூட தெரியவில்லையா'

பெயர் வெளியிட விரும்பாத ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் ஒருவர் கூறுகையில், 'உயிரிழந்த பெண் யானைக்கு சிகிச்சை அளித்த, மருத்துவ குழுவினரில் இருந்த ஐந்து டாக்டர்களில் இருவர், யானைகள் முகாமில், 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். அவர்கள், யானை கருத்தரித்து இருந்ததை தெரிந்து கொள்ளவில்லை.
கால்நடைகளுக்கும், வனவிலங்குகளுக்கும் சிகிச்சை முறை மாறும். யானைக்கு சிகிச்சை அளிக்கும் முன், அதன் உடல்நிலையை முழுவதுமாக தெரிந்துகொண்டே துவக்க வேண்டும். பெல்ட் அணிவித்ததாலும் குட்டி உயிரிழந்திருக்கலாம். சிகிச்சை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.



'ஒருவருக்கு கூட தெரியவில்லையா'

பெயர் வெளியிட விரும்பாத ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் ஒருவர் கூறுகையில், 'உயிரிழந்த பெண் யானைக்கு சிகிச்சை அளித்த, மருத்துவ குழுவினரில் இருந்த ஐந்து டாக்டர்களில் இருவர், யானைகள் முகாமில், 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். அவர்கள், யானை கருத்தரித்து இருந்ததை தெரிந்து கொள்ளவில்லை.
கால்நடைகளுக்கும், வனவிலங்குகளுக்கும் சிகிச்சை முறை மாறும். யானைக்கு சிகிச்சை அளிக்கும் முன், அதன் உடல்நிலையை முழுவதுமாக தெரிந்துகொண்டே துவக்க வேண்டும். பெல்ட் அணிவித்ததாலும் குட்டி உயிரிழந்திருக்கலாம். சிகிச்சை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us