/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்; பொது மக்கள் கடும் அவதி 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்; பொது மக்கள் கடும் அவதி
15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்; பொது மக்கள் கடும் அவதி
15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்; பொது மக்கள் கடும் அவதி
15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர்; பொது மக்கள் கடும் அவதி
ADDED : ஜூன் 12, 2025 10:10 PM
மேட்டுப்பாளையம்; காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில், பெள்ளாதி ஊராட்சியும் ஒன்று. காரமடை நகராட்சி அருகே இந்த ஊராட்சி அமைந்துள்ளதால், புதிய வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. தற்போது 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகர் குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
குடிநீர் குறைவாக வருவதால், கடந்த மூன்று மாதங்களாக, பத்திலிருந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து பெள்ளாதி ஊராட்சி முன்னாள் தலைவர் பூபதிகுமரேசன் கூறியதாவது:
தற்போது ஊராட்சிக்கு தினமும், 5 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருகிறது. அதிலும் அன்னூர் சாலையில், சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால், அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் சரியாக பம்பிங் நடைபெறுவது இல்லை. பவானி ஆறு அருகில் ஓடியும், போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள், ஆய்வு செய்து, சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து திருப்பூர் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது அன்னூர் சாலையில், சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெறுகின்றன. மரங்கள் வெட்டும் போதும், பாலம் வேலைகள் நடைபெறும் போதும், மெயின் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. அதை சீர் செய்த பின்பு பம்பிங் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் நிர்ணயம் செய்த அளவு குடிநீர், தினமும் பம்பிங் செய்கிறோம். குடிநீர் குறைவாக வருவது என்றால், சாலையில் உள்ள குழாயில் உடைப்பு ஏதேனும் உள்ளதா என, ஊராட்சி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.