Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/'நம்ம சாலை' செயலி பதிவிறக்க விழிப்புணர்வு! பள்ளம், ரோடு சீரமைக்க உதவும்

'நம்ம சாலை' செயலி பதிவிறக்க விழிப்புணர்வு! பள்ளம், ரோடு சீரமைக்க உதவும்

'நம்ம சாலை' செயலி பதிவிறக்க விழிப்புணர்வு! பள்ளம், ரோடு சீரமைக்க உதவும்

'நம்ம சாலை' செயலி பதிவிறக்க விழிப்புணர்வு! பள்ளம், ரோடு சீரமைக்க உதவும்

ADDED : செப் 15, 2025 10:39 PM


Google News
Latest Tamil News
மேட்டுப்பாளையம்: காரமடை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் 'நம்ம சாலை' செயலியை பதிவிறக்கம் செய்து, மக்கள் பயன்பெற வேண்டும் என அதிகாரிகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் பெள்ளாதி, பெள்ளேபாளையம், மருதுார், சிக்காரம்பாளையம், சின்னகள்ளிப்பட்டி, இலுப்பநத்தம், இரும்பொறை, ஜடையம்பாளையம், காளம்பாளையம், கெம்மாரம்பாளையம், மூடுதுறை, நெல்லித்துறை, தேக்கம்பட்டி, தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிக்கதாசம்பாளையம், ஓடந்துறை என 17 ஊராட்சிகள் உள்ளன.

இந்த ஊராட்சிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சிகளின் பல சாலைகள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இணைகின்றன. நீலகிரி மாவட்டம், கேரளா மாநிலம், கோவை நகர் பகுதி, ஈரோடு போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்லவும் பயன்படுகின்றன.

நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊராட்சி சாலைகளில் பயணிக்கின்றன.

இந்த சாலைகள் சேதம் அடையும் போது, அதில் பயணிக்கும் மக்கள் கடும் அவதியடைகின்றனர். சாலை தொடர்பான பிரச்னைகளை உடனடியாக தீர்த்து வைக்க 'நம்ம சாலை' செயலியை தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இந்த செயலி, தமிழக அரசால் பராமரிக்கப்படும் சாலை பிரச்னைகள் தொடர்பான புகார்களை தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

இந்த செயலியில் புகார் அளித்தால், அந்த புகார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக செல்கிறது. புகார் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

காரமடை ஒன்றிய ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி அலுவலக அதிகாரிகள் இந்த செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் கூறுகையில், ''விபத்தில்லா தமிழகம் என்ற இலக்கை அடைவதையும், தமிழகத்தில் பள்ளங்கள் இல்லாத சாலைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் வாயிலாக சாலைகளில் உள்ள பள்ளங்களின் புகைப்படங்களை பதிவேற்ற இயலும். அவை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பள்ளங்கள் சரி செய்யப்படும். அதன் பின், சீரமைக்கப்பட்ட சாலைகளின் புகைப்படங்களும் அந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us