/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயில்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு வேண்டாம் விபரீதம்!பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவுரைரயில்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு வேண்டாம் விபரீதம்!பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவுரை
ரயில்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு வேண்டாம் விபரீதம்!பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவுரை
ரயில்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு வேண்டாம் விபரீதம்!பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவுரை
ரயில்பாதையில் விபத்துகள் அதிகரிப்பு வேண்டாம் விபரீதம்!பாலக்காடு கோட்ட நிர்வாகம் அறிவுரை
ADDED : பிப் 06, 2024 01:45 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - பாலக்காடு, பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில் பாதைகளில் விபத்துக்களை தவிர்க்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வழியாக, திருச்செந்துார், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், ரயில் பாதையில் போதிய விழிப்புணர்வு இல்லாமல், பொதுமக்கள் நடை பயிற்சி செய்வது; மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் இளைஞர்கள் கூடி சுற்றுவது, மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். தண்டவாளத்தின் அருகே குடியிருப்பவர்களில் சிலர், ஆடு, மாடு வளர்க்கின்றனர். அவர்கள், ரயில் பாதையில் கால்நடைகளை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடுகின்றனர். இதனால், ரயில் வரும் போது, தண்டவாளத்தை கடக்கும் மக்கள் அடிபட்டு இறக்கின்றனர். ரயில் மோதி கால்நடைகளும் இறக்கின்றன.
பாலக்காடு கோட்டத்தில், கடந்த, 2021ம் ஆண்டு, 292 இறப்புகள், 2022ம் ஆண்டு 494, 2023ல் 541, கடந்த ஜனவரி மாதம் மட்டும், 28 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில், அத்துமீறி நுழைவதால் கடந்த, 2021ல் 171 விபத்துகள்; 2022ல், 245; 2023ம் ஆண்டு, 268 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துகளை தவிர்க்க அத்துமீறி நுழைவதை தடுக்க வேண்டும்.
மேலும், ரயில் பாதையில், தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த, 2021ல், 44 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 2022ல், 63 பேர்; 2023ல், 67 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
ரயில்பாதையில் கால்நடைகள் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விடுவதால் விபத்துக்குள்ளாகி இறக்கின்றன. இதற்காக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.கடந்த, 2020ல், ஒன்பது வழக்கு; 2021ல், 11; 2022ல், 18; 2023ல் 28 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால், கால்நடை உரிமையாளர்களின் கவனக்குறைவால், இந்த விபத்துகள் அதிகளவு நடக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
பாலக்காடு கோட்டத்திற்குள், ரயில்பாதை விபத்துகள் குறித்து கூறுவது வெறும் புள்ளி விபரங்கள் இல்லை. அவர்கள் இறந்த பின் குடும்பத்தின் நிலை பாதிப்பிற்குள்ளாகிறது. இதை உணரும் பொதுமக்கள் ரயில் பாதைக்கு செல்லாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
ரயில்வே சட்டம், 1989ன் படி, ரயில்வேயின் எந்த பகுதிக்குள்ளும் சட்டப்பூர்வமான அதிகாரமின்றி நுழையக்கூடாது. சட்ட பூர்வமாக நுழைந்தாலும், ரயில்வே சொத்துக்களை தவறாக பயன்படுத்தினால், கைது செய்து சிறையில் அடைப்பு, அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிகரித்து வரும் விபத்துகள், உயிரிழப்புகள் மற்றும் அத்துமீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியமாகும். இதுகுறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
கோட்ட ரயில்வே மேலாளர் அருண்குமார் சதுர்வேதி கூறுகையில், ''ரயில் தண்டவாளத்தை கடக்காமல், இது போன்ற உயிரிழப்புகளைத் தவிர்க்க பயணியரும், பொதுமக்களும் ரயில்வேக்கு ஒத்துழைக்க வேண்டும். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது,'' என்றார்.