ADDED : ஜன 07, 2024 12:45 AM
கோவை;தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தாலுகா அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு தற்போது புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 'டிஜிட்டல் கிராப்' சர்வே என்ற திட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களை ஈடுபடுத்தி, கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கிறது.
இத்திட்டத்தில் உள்ளதாக கூறப்படும் குளறுபடிகளை களைய, கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இச்சூழலில், கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்து பணி வரன்முறை செய்யப்படாத கிராம நிர்வாக அலுவலர்களை கட்டாயம் இப்பணி செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யவில்லை என்றால், பணியில் இருந்து நீக்கி விடுவோம் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கோவை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், மாவட்ட தலைவர் கண்ணன், செயலாளர், ஜோதி பிரகாஷ், பொறுப்பாளர்கள் உதயகுமார், சிவப்பிரகாஷ், கங்கேஷ், அறிவுடைநம்பி மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.