/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி தீவிரம்; லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயி பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி தீவிரம்; லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயி
பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி தீவிரம்; லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயி
பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி தீவிரம்; லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயி
பசுமைக்குடிலில் வெள்ளரி சாகுபடி தீவிரம்; லாபம் ஈட்டும் பட்டதாரி விவசாயி
ADDED : செப் 09, 2025 09:57 PM

பொள்ளாச்சி; ''பொள்ளாச்சி அருகே, உயர் தொழில்நுட்ப பசுமைக்குடிலில், வெள்ளரி சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியும்,'' என, இளம் பட்டதாரி விவசாயி அரவிந்த் விஜய் தெரிவித்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது. இச்சூழலில், தென்னையில் அடுத்தடுத்து நோய் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன.
நோய் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அகற்றி, மாற்று விவசாயத்தை மேற்கொள்ள ஆலோசித்து வருகின்றனர். இந்நிலையில், பட்டதாரி இளைஞர், வெள்ளரி சாகுபடி செய்து லாபம் ஈட்டி வருகிறார்.
பொள்ளாச்சி அருகே பொன்னாயூரை சேர்ந்த தேங்காய் வியாபாரி சண்முகசுந்தரம், மோகனம்பாள் தம்பதியின் மகன் அரவிந்த் விஜய். 28. இவர், பி.எஸ்சி., வேளாண்மை, எம்.பி.ஏ., படித்துள்ளார்.
தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், உயர் தொழில்நுட்ப பசுமைக்குடில் மானியத்தில் அமைத்து கொடுக்கப்பட்டது. மத்திய, மாநில அரசு மானியத்துடன் அமைக்கப்பட்ட பசுமைக்குடிலில், அரவிந்த் விஜய் வெள்ளரி சாகுபடி செய்து அசத்துகிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கல்லுாரி படிப்பு முடிந்ததும் தனியார் வங்கியில் மேலாளர் பணி கிடைத்தது. விவசாயத்தின் மீது இருந்த ஈடுபட்டால் அந்த வேலை வேண்டாம் என விவசாயம் செய்ய வந்தேன்.தென்னைக்கு மாற்று பயிர் சாகுபடி செய்யலாம் என்ற நோக்கத்தோடு, பசுமைக்குடிலில், வெள்ளரி சாகுபடி செய்தேன்.
விதை, ஆள் கூலி, உரம் என மூன்றரை லட்சம் ரூபாய் செலவாகிறது. பசுமைக்குடிலில் சாகுபடி செய்யப்பட்ட வெள்ளரி, 120 நாள் பயிராகும். ஒரு செடிக்கு காலை, மாலை, 10 நிமிடம், ஒன்றரை லிட்டர் தண்ணீர் தெளித்தால் போதும். ஒரு ஏக்கருக்கு, 50 டன் வரை வெள்ளரி அறுவடை செய்யப்படுகிறது.
நிலத்தில் ஒரு ஏக்கரில், மூவாயிரம் செடிகள் நடலாம். ஆனால், பசுமைக்குடிலில், ஒன்பதாயிரம் செடிகள் நடவு செய்யலாம். மூன்று மடங்கு செடிகள் நடவு செய்வதுடன் போதிய லாபமும் கிடைக்கிறது. நீர் சேமிப்பும் ஏற்படுகிறது.
இதை தொடர்ந்து, 'பொக்கே' தயாரிப்புக்கு தேவையான பூக்கள் சாகுபடி செய்ய முடிவு செய்துள்ளேன். தென்னையில் நோய் தாக்குதல் பாதிப்பு உள்ள சூழலில், மாற்று விவசாயம் கை கொடுக்கிறது.இது தவிர, பசுமைக்குடில் அமைத்து தரும் பணிகளையும் செய்து வருகிறேன்.
இவ்வாறு, கூறினார்.