/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க.,வில் விரிசல்! நகராட்சி கவுன்சிலில் பகிரங்க குற்றச்சாட்டு;வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு தி.மு.க.,வில் விரிசல்! நகராட்சி கவுன்சிலில் பகிரங்க குற்றச்சாட்டு;வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு
தி.மு.க.,வில் விரிசல்! நகராட்சி கவுன்சிலில் பகிரங்க குற்றச்சாட்டு;வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு
தி.மு.க.,வில் விரிசல்! நகராட்சி கவுன்சிலில் பகிரங்க குற்றச்சாட்டு;வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு
தி.மு.க.,வில் விரிசல்! நகராட்சி கவுன்சிலில் பகிரங்க குற்றச்சாட்டு;வெளிநடப்பு செய்ததால் கூட்டத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 30, 2025 10:46 PM

பொள்ளாச்சி; 'நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, டெண்டர் விட்டாலும், பணிகள் எதுவும் நடப்பதில்லை, எனக்கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள், 17 பேரும்; நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 3 பேரும், வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் சியாமளா தலைமையில் நடந்தது. கமிஷனர் கணேசன் முன்னிலை வகித்தார்.
தலைவர்: திரு.வி.க., மார்க்கெட் நுழைவுவாயிலில் கட்டணம் வசூல் செய்யும் உரிமம் குத்தகை விடுதல் குறித்து வழக்கு நடைபெறுகிறது. எனவே, மூன்றாவது தீர்மானம் எடுத்துக்கொள்ளவில்லை. மற்ற தீர்மான பொருட்கள் குறித்து விவாதிக்கலாம்.
ஜேம்ஸ்ராஜா (அ.தி.மு.க.,): நகராட்சியில் திரு.வி.க.,மார்க்கெட் குத்தகை விடும் போது நடந்த சம்பவம் குறித்து விளக்க வேண்டும். அதை பற்றி பேச வேண்டும்.
தலைவர்: வழக்கு உள்ளதால் அந்த தீர்மானம் எடுத்துக்கொள்ளவில்லை. அது பற்றி விவாதிக்க வேண்டாம்.
நாகராஜ் (தி.மு.க.,): கே.வி.ஆர்., பார்க் பணிகள் கடந்த, இரண்டு ஆண்டுகளாகியும் முடியவில்லை. எந்த பணிகளும் நடக்கவில்லை. எனவே, ஆட்சேபனை தெரிவித்து வெளிநடப்பு செய்கிறேன்.
இவ்வாறு பேசியதுடன், தலைவரிடம் சென்று அவர் கடிதம் வழங்கினார். இதை தொடர்ந்து துணை தலைவர் கவுதமன் மற்றும், தி.மு.க., கவுன்சிலர்கள் மாணிக்கராஜ், செந்தில்குமார், பாலமுருகன், கிருஷ்ணகுமார், பெண் கவுன்சிலர்கள் 11 என, 17 பேர் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் வழங்கி வெளிநடப்பு செய்தனர்.
ஜேம்ஸ்ராஜா: பாதாள சாக்கடை திட்டத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். அதில் உள்ள பிரச்னைகள் சரி செய்யப்படவில்லை. தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லை. தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வதில்லை. குப்பைகள் அள்ளுவதில்லை.
சையத்யூசப் (ம.தி.மு.க.,): நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அவசரகதியில் பணிகள் மேற்கொண்டு ரோடு போடப்பட்டது. இதனால், ரோடுகள் உயரமாகியும், குடியிருப்புகள் குறுகலானது. தற்போது பிரச்னை எழுந்துள்ளது.
தலைவர்: நகராட்சி முழுவதுமாக குறை கூற முடியாது. தமிழகம் முழுவதும் பணியாளர்கள் எண்ணிக்கை குறைத்து வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியில் குப்பை முறையாக அள்ளப்படுகிறது.
இதை தொடர்ந்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சாந்தி, ஜேம்ஸ்ராஜா, வசந்த் ஆகியோர், நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறோம் என கோஷமிட்டு வெளிநடப்பு செய்தனர். அதன்பின், தலைவர் மற்றும் எட்டு கவுன்சிலர்கள் மட்டுமே கூட்டத்தில் இருந்தனர்.
இதையடுத்து பேசிய தலைவர், ''கூட்டம் துவங்கிய போது உறுப்பினர்கள் அனைவரும் இருந்ததால், கூட்டம் நடந்ததற்கான கோரம் இருந்தது. உறுப்பினர்கள், ஆட்சேபனை கடிதம் பதிவு செய்யப்படும்,'' என, தெரிவித்து, கூட்டம் நிறைவடைந்ததாக அறிவித்தார்.
தீர்மானம் நிறைவேறல!
மொத்தம், 33 வார்டு கவுன்சிலர்களில், இரண்டு கொ.ம.தே.க., இரண்டு தி.மு.க., கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. தி.மு.க., கவுன்சிலர்கள் 17 பேர்; சுயே., கவுன்சிலர் தேவகி மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர் மூவர் என, மொத்தம், 21 பேர் வெளிநடப்பு செய்தனர்.
கூட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் செயல்படுத்த, 14 முகாம்கள் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட, 18 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால், தீர்மானங்கள் எதுவும் நிறைவேறவில்லை.
தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில், 'கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும், டெண்டர் விட்ட பணிகள் தாமதமாக நடக்கின்றன. வார்டுக்கு தேவையான பணிகள் குறித்து வலியுறுத்தினாலும், கூட்டத்தில் தீர்மானம் வருவதில்லை. எங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் வெளிநடப்பு செய்தோம்,' என்றனர்.