/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஊதிய உயர்வுக்கு ஒப்பந்த ஓட்டுனர்கள் காத்திருப்புஊதிய உயர்வுக்கு ஒப்பந்த ஓட்டுனர்கள் காத்திருப்பு
ஊதிய உயர்வுக்கு ஒப்பந்த ஓட்டுனர்கள் காத்திருப்பு
ஊதிய உயர்வுக்கு ஒப்பந்த ஓட்டுனர்கள் காத்திருப்பு
ஊதிய உயர்வுக்கு ஒப்பந்த ஓட்டுனர்கள் காத்திருப்பு
ADDED : ஜன 31, 2024 12:42 AM

கோவை;மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நேற்று மேயர் கல்பனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
இதில், பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த, 47 மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில் துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
கோவை மாநகராட்சி ஒப்பந்த ஓட்டுனர்கள்(ஜீப்) மனுவில், 'பல ஆண்டுகளாக மாநகராட்சியில் ஜீப் ஓட்டுனர்களாக பணிபுரிந்து வருகிறோம்.
மூன்று ஆண்டுக்கும் மேலாக எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. மாதம், ரூ.13 ஆயிரத்து 700 சம்பளம் போதுமானதாக இல்லை. எங்களது வாழ்வாதாரம் காக்க, ஊதிய உயர்வு வழங்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீ கிருஷ்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மனுவில், 'மாநகராட்சி, 73வது வார்டு தாளவாய்க்கால் பாலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவோர், மக்கும், மக்காத குப்பையை கொட்டி செல்கின்றனர்.
இதனால், அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. எனவே, குப்பையை அகற்றுவதுடன், பாலத்தின் பக்கவாட்டில் கம்பி வேலி அமைத்து தர வேண்டும்.
தாளவாய்க்கால் துார்வாரும்போது அப்புறப்படுத்திய சுற்றுச்சுவரை மீண்டும் கட்டித்தர வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.
சாஜ் லிபர்ட்டி கார்டன், லுானா நகர், இடையர்பாளையம் பகுதி மக்கள் மனுவில், 'மாநகராட்சி, 16வது வார்டு அப்பாஸ் கார்டன், சாஜ் கார்டன் மற்றும் விரிவாக்க பகுதி, கே.ஆர். கார்டன், ஜெயலட்சுமி கார்டன், தருண் கார்டன், கணபதி கார்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையின் லுானா நகர் முகப்பு பகுதி மற்றும் பிரதான ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. தெரு நாய், குதிரை தொல்லையும் அதிகரித்துள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.