ADDED : ஜூன் 26, 2025 11:18 PM
கோவை; அரசு பஸ் நடத்துனரை தாக்கிய தனியார் பஸ் நடத்துனரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் திருமூர்த்தி, 38; அரசு பஸ் நடத்துனராக பணியாற்றி வருகிறார். கடந்த, 24ம் தேதி ரயில் நிலையத்தில் இருந்து சோமையம்பாளையம் செல்லும் பஸ்சில் பணியில் ஈடுபட்டிருந்தார். பஸ்சை இடையர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில் நிறுத்தி பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ், அரசு பஸ்சை முந்தி சென்று வழிமறித்து நின்றது.
ஆட்கள் ஏற்றுவதில் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ் நடத்துனர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தனியார் பஸ்சில் இருந்து இறங்கிய கண்டக்டர் திருமூர்த்தியை தகாத வார்த்தைகளால், கீழே தள்ளி, தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த திருமூர்த்தி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருமூர்த்தி அளித்த புகாரில் தனியார் பஸ் நடத்துநரான சத்தியமங்கலத்தை சேர்ந்த சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.