/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஐ.டி., துறையில் கோவை அபார வளர்ச்சி; ஏழு ஆண்டுகளில் 300 சதவீதம்ஐ.டி., துறையில் கோவை அபார வளர்ச்சி; ஏழு ஆண்டுகளில் 300 சதவீதம்
ஐ.டி., துறையில் கோவை அபார வளர்ச்சி; ஏழு ஆண்டுகளில் 300 சதவீதம்
ஐ.டி., துறையில் கோவை அபார வளர்ச்சி; ஏழு ஆண்டுகளில் 300 சதவீதம்
ஐ.டி., துறையில் கோவை அபார வளர்ச்சி; ஏழு ஆண்டுகளில் 300 சதவீதம்
ADDED : மே 12, 2025 12:23 AM

கோவை : கடந்த 7 ஆண்டுகளில் 300 சதவீத வளர்ச்சியைப் பெற்று, அபரிமிதமாக முன்னேறி வருகிறது கோவை. உள்கட்டமைப்பை மேம்படுத்தினால், இன்னும் வளர்ச்சியைப் பெற முடியும் என, தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில், ஐ.டி., துறையின் முக்கிய தளமாக, கோவை வளர்ந்து வருகிறது. சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களின் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், கோவையின் இதமான பருவநிலை, திறன் மிக்க இளைஞர்கள் காரணமாகவும், பல பன்னாட்டு ஐ.டி., நிறுவனங்கள் கோவையைத் தேர்ந்தெடுக்கின்றன.
ஐ.டி., துறையில் இந்நகரம் வேகமாக வளரும் நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டை துரிதப்படுத்தினால், இன்னும் வளர்ச்சியை எட்ட முடியும் என்கின்றனர் தொழில்துறையினர். இதுதொடர்பாக, இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை கிளையின் முன்னாள் தலைவரும், 'க்வாட்ரா' நிறுவனத்தின் இயக்குனருமான பிரசாந்த் சுப்ரமணியனிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது:
ஐ.டி., துறையில் கோவைக்கு நிறைய சாதகமான அம்சங்கள் உள்ளன. ஏற்கனவே, உயர்கல்வியில் முன்னோடி நகராக உள்ளது. இன்ஜி., மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் நாட்டிலேயே குறிப்பிடத்தக்க அளவில் அதிகம் உள்ள நகர்.
திறன்மிகு பணியாளர்கள், நல்ல பருவநிலை, உள்கட்டமைப்பு போன்றவை ஐ.டி., துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். டைடல் பார்க், எல்காட் பார்க், டைசெல் பயோடெக், கே.ஜி.ஐ.எஸ்.எல்., ரத்தினம் டெக்ஜோன், இண்டியா லேண்ட், கே.சி.டி., டெக்., என ஏராளமான அரசு மற்றும் தனியார் ஐ.டி., பார்க்குகள் உள்ளன.
300 சதவீத வளர்ச்சி
850 ஐ.டி., நிறுவனங்கள் செயல்படுகின்றன. கடந்த 6,7 ஆண்டுகளில் ஐ.டி.,துறையில் 300 சதவீத வளர்ச்சியை கோவை எட்டியுள்ளது. காக்னிசன்ட், ரெஸ்பான்சிவ், பாஷ், டி.சி.எஸ்., உட்பட ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளன. உள்நாட்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.
20 ஆண்டுகளுக்கு முன், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் என்ற விதையில் துவங்கிய ஐ.டி., துறை இன்று விரிவடைந்து நிற்கிறது. ஜி.சி.சி.,கள் உள்ளன. பெல்ஜியத்தின் கால்ரயட் சில்லறை வர்த்தக நிறுவனம் உட்பட ஏராளமான நிறுவனங்கள், ஜி.சி.சி., வசதியைத் துவக்கி உள்ளன.
தற்போது, கோவையில் ஐ.டி., துறை சார்ந்து 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர். தொழில்துறையில் 'இன்பிளெக்சன் பாய்ன்ட்' எனும் சொல்லாடல் உள்ளது. 90களின் பிற்பகுதியில், ஒய்2கே பிரச்னையைப் போன்ற சூழல் இது. ஏ.ஐ., யின் அபாரமான வளர்ச்சி, இனி எங்கு இட்டுச்செல்லும் எனத் தெரியாது. ஐ.டி., துறையின் முக்கியமான தருணத்தில் இருக்கிறோம்.
ஏ.ஐ., ஆட்டோமேஷன் போன்ற, தொழில்நுட்பங்களின் வருகை பெரும் மாற்றத்தை நிகழ்த்தக் காத்திருக்கின்றன. 2022 நவ.,ல் சாட் ஜி.பி.டி., அறிமுகமானது. இன்று சாமான்யர்களும் ஏ.ஐ.,க்கு தகவமைத்துக் கொண்டுள்ளனர்.
ஏ.ஐ., வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். வருவாயை பல மடங்கு அதிகரிக்கும். ஏராளமான வாய்ப்புகளும் காத்திருக்கின்றன.
இந்தியாவின் ஸ்டார்ப்அப்-க்கு உகந்த நகரங்கள் பட்டியலில், கோவை 13வது இடத்தில் உள்ளது. எதிர்காலத்தில் ஐ.டி., துறையின் பாய்ச்சல் அதீதமாக இருக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.