Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால் குற்றவியல் நடவடிக்கை கோவை வடக்கு ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால் குற்றவியல் நடவடிக்கை கோவை வடக்கு ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால் குற்றவியல் நடவடிக்கை கோவை வடக்கு ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால் குற்றவியல் நடவடிக்கை கோவை வடக்கு ஆர்.டி.ஓ., எச்சரிக்கை

ADDED : ஜூன் 03, 2025 01:17 AM


Google News
அன்னுார்,; 'ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என சமாதான கூட்டத்தில் ஆர்.டி.ஓ., தெரிவித்தார்.

அன்னுார் அருகே வடக்கலூரில் கருப்பராயன் கோவிலில் காதல் திருமணம் செய்த குடும்பங்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்படுகிறது. கோவில் வரி வசூலிப்பதில்லை. ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கின்றனர் என சுந்தரம் என்பவர் 15 குடும்பங்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இது குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது. பாதிக்கப்பட்டோர் தரப்பில் சுந்தரம் உள்பட மூன்று பேரும், எதிர்த்தரப்பில் புருஷோத்தமன் உள்பட நான்கு பேரும் பங்கேற்றனர்.வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் விசாரணை நடத்தி பிறப்பித்த உத்தரவு:

கருப்பராயன் கோவிலில் மாங்கல்ய வரி வசூல் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கும் பொதுவான நபரை நியமிக்க வேண்டும். அந்த நபர் வடக்கலூரில் உள்ள 200 குடும்பங்களிடமும் நேரடியாக சென்று மாங்கல்ய வரி வசூல் செய்ய வேண்டும். இதன் விபரத்தை கிராம நிர்வாக அலுவலர், வடக்கு வருவாய் ஆய்வாளர், தாசில்தார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இரு தரப்பினரும் அவதூறு கருத்துக்களை தெரிவிக்க கூடாது. கிராமத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சி மற்றும் துக்க நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

புகார் செய்த தரப்பினர் மற்றும் எதிர் தரப்பினர் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்ளக்கூடாது. எந்தவிதமான பாரபட்சமான நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. கோவிலில் ஆலய வழிபாடு நேரத்தை தவிர மற்ற நேரத்தில் ஊர் பொதுமக்கள் அங்கு நின்று அமரவும் பேசவும் அனுமதியில்லை.

இந்த உத்தரவை பின்பற்றாத நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அன்னுார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us