Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

சிட்டி கிரைம்

ADDED : பிப் 24, 2024 12:36 AM


Google News

ரூ.5.23 லட்சம் திருட்டு


கோவை சாய்பாபாகாலனி ஆர்.கே.புரத்தில், கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், கோவையில் பல இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இங்கு கடந்த ஆண்டு ஆக., மாதத்தில் இருந்து, சைட் இன்ஜினியராக கடலுார் திருப்பாதிரைபுலியூரை சேர்ந்த அய்யப்பன், 33, என்பவர் பணிபுரிந்து வந்தார். அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால், கட்டுமான நிர்வாகத்தினர் அவரை, சில நாட்களுக்கு முன் பணியில் இருந்து நீக்கினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நிறுவன மேலாளர் பெரியநாயக்கன்பாளையம் ஆனந்தா நகரை சேர்ந்த ரமேஷ், 32, அலுவலகத்தை திறந்தார். அங்கிருந்த அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5.23 லட்சம் திருட்டு போயிருந்தது. சைட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த அய்யப்பன், பணத்தை திருடி சென்று விட்டதாக, நிறுவனத்தினர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அய்யப்பன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தவறி விழுந்து வாலிபர் பலி


பீகார் மாநிலம் ஹசன்பூரை சேர்ந்தவர் ஷிவ்நாத் பஸ்வான், 22. இவர் கோவை ரத்தினபுரியில் தங்கி தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில், லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். கடந்த 19ம் தேதி ரத்தினபுரி, 7வது வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் மொட்டை மாடியில், மது போதையில் துாங்கி கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.--

விபத்தில் முதியவர் உயிரிழப்பு


பச்சாபாளையம், காந்தி காலனியை சேர்ந்தவர் நடராஜ்,61; காய்கறி வியாபாரம் செய்து வந்தார், நேற்றுமுன்தினம் இரவு, காளம்பாளையம், சிறுவாணி மெயின்ரோட்டை, நடந்து கடந்துள்ளார். அப்போது, மேற்கு நோக்கி அதிவேகமாக வந்த ஸ்கூட்டர், நடராஜ் மீது மோதியது.

இதில், தடுமாறி விழும்போது, கிழக்கு நோக்கி வந்த காரும் நடராஜ் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே நடராஜ் உயிரிழந்தார். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us