விபத்தில் வாலிபர் உட்பட இருவர் பலி
* திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், 33. இவர் நேற்று முன்தினம் பைக்கில் அவிநாசி ரோடு திருஞனசம்பந்தம் சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, கார்த்திகேயன் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-- -- வீட்டில் தங்கம், வெள்ளி கொள்ளை
கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 51; தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றார். மாலை வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 5 பவுன், 5 கிராம் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருந்தது. சரவணன் புகாரின் படி சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இரு வீடுகளில் கொள்ளை முயற்சி
கோவை கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பிரபு, 43; டிரைவர். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைக்க முயற்சி செய்து இருந்தது தெரிந்தது. அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அவரது சகோதரியின் வீட்டின் பூட்டையும் உடைக்க முயற்சி செய்து இருந்தனர். பிரபு கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.