நாய் கழுத்தை இறுக்கி கொலை
கோவை: வடமதுரை பகுதியை சேர்ந்தவர் பிருந்தா, 48; விலங்குகள் நல அமைப்பு நிர்வாகி. ராமநாதபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, குப்பை தொட்டியில் நாய் ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தார். நாயின் கழுத்தில் கயிற்றை கட்டி, இறுக்கி கொலை செய்து வீசியது தெரிந்தது. இதுகுறித்து பிருந்தா ராமநாதபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், நாயை கொன்று வீசிய நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
அண்ணனை தாக்கிய தம்பி கைது
போத்தனூர் : வெள்ளலூர், பட்டணம் சாலையில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் கோகுல்நாத், 33. இவரது தம்பி முனியப்பன், 26. கோகுல்நாத் குடியிருக்கும் வீடு தொடர்பாக தம்பி மற்றும் தாயுடன் பிரச்னை உள்ளது. கடந்த, 22ல் தாய், தம்பி ஆகியோர் வீட்டை காலி செய்ய கூறி, தகராறு செய்தனர். அப்போது முனியப்பன் உடைந்த பாட்டிலால் கோகுல்நாத்தை தாக்கினார். அருகே வசிப்போர் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி, முனியப்பனை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மோதியதால் பிரச்னை
குனியமுத்துார்: சுகுணாபுரம் கிழக்கு, புதிய பள்ளிவாசல் வீதியை சேர்ந்தவர் நந்தகுமார், 25; பெயின்டர். கடந்த, 22ம் தேதி இரவு இடையர்பாளையம் பிரிவு, டாஸ்மாக் மதுக்கடை முன் நடந்து சென்ற போது, எதிரே வந்தவர் இவர் மீது மோதியதில் மொபைல் போன் கீழே விழுந்து உடைந்தது. பழுது நீக்கி தருமாறு அந்நபரிடம் நந்தகுமார் கூறினார். ஆத்திரமடைந்த அந்நபர் நந்தகுமாரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.
துணிக்கடையில் தீ விபத்து
கோவை: செல்வபுரம் சொக்கம்புதூரை சேர்ந்தவர் ஜெயசத்யா, 48. ஒப்பணக்கார வீதியில் ரெடிமேடு துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் பக்கத்து கடையை சேர்ந்தவர் ஜெயசத்யாவிடம், கடையிலிருந்து புகை வருவதாக கூறினார். ஜெயசத்யா வந்து பார்த்தபோது, கடையில் இருந்த துணிகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.
கல்லுாரி மாணவர்களுக்கு அடி
கோவை: திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் ராஜபிரபு, 19. கோவை சிட்ரா பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லுாரியில், படித்து வருகிறார். இவருடன் உடன் பயிலும், கோகுல், துஷார், அகிலேஷ் ஆகியோர் தங்கியுள்ளனர். கடந்த, 21ம் தேதி நான்கு பேரும் அறையில் இருந்த போது, 20 வயதுடைய அடையாளம் தெரியாத நான்கு பேர் அறைக்குள் நுழைந்து, ராஜபிரபு உள்ளிட்ட நான்கு பேரையும் தாக்கினர். கத்தியைக்காட்டி மிரட்டி, நான்கு மொபைல்போன்கள், வெள்ளி மோதிரம், செயின், காப்பு ஆகியவற்றை பறித்து தப்பினர். ராஜபிரபு அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் அவதுாறு
கோவை: கவுண்டம்பாளையம் போலீசார், சமூகவலைதளங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, மதப்பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் வகையில், முகநுாலில் ஒருவர் கருத்துகளை பதிவிட்டிருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், அக்கருத்தை பதிவிட்டது தெரிந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பா.ஜ.,வினர் மீது வழக்கு
கோவை: துடியலுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, என்.ஜி.ஜி.ஓ., காலனி பகுதியில் அனுமதியின்றி, பா.ஜ., வினர் பேனர் வைத்திருந்தனர். இது தொடர்பாக, பா.ஜ., கிழக்கு மண்டல தலைவர் சரவணக்குமார், துணைத் தலைவர் சுந்தர்ராஜ், ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ரூ.73 ஆயிரம் திருட்டு
போத்தனூர்: குறிச்சியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரி, 57; ரேஷன் கடை ஊழியர். கடந்த வாரம் இவரது வீட்டில் கைப்பையில் வைத்திருந்த, ரூ.73 ஆயிரம் திருட்டு போனது. சுந்தராபுரம் போலீசார் விசாரணை நடத்தி, மகேந்திரா, 37 என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
சூதாடிய கவுன்சிலர் கைது
தொண்டாமுத்துார்: ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, உரிப்பள்ளம் புதூரில் உள்ள தனியார் தோட்டத்தில், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக, அ.தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் பிரதீப்,37, கரடிமடையை சேர்ந்த கனகராஜ்,40, கள்ளிமேட்டை சேர்ந்த செல்வன்,55, ஆலாந்துறையை சேர்ந்த கந்தசாமி,52, பூலுவபட்டியை சேர்ந்த மாரியப்பன்,56, மத்வராயபுரத்தை சேர்ந்த ராஜசேகரன்,45, தென்னமநல்லூரை சேர்ந்த கவுதம், 38 ஆகிய ஏழு பேரை கைது செய்து, ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து, 2.51 லட்சம் ரூபாய் மற்றும் மூன்று பைக்குகளை பறிமுதல் செய்தனர்.