ADDED : ஜன 05, 2024 01:04 AM
கோவை;கோவை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் விபரங்களை கணக்கெடுக்க வருவோரிடம் உரிய தகவல் வழங்க வேண்டுமென, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தரவு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்பணிக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் மாற்றுத்திறனாளிகள் பற்றிய முழு விபரங்களை வழங்க வேண்டும்.
மகளிர் திட்டத்தில் உள்ள களப்பணியாளர்களான சுய உதவிக்குழு பயிற்றுனர் மற்றும் சமூக வள வல்லுனர்கள் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதுவரை அடையாள அட்டை பெறாதவர்கள் அனைவரும், தங்களது இருப்பிடங்களுக்கு வருகை புரியும் கணக்கெடுப்பு பணியாளர்கள் கோரும் முழு தகவல்களையும் எவ்வித தயக்கமின்றி வழங்க வேண்டும். விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை, 0422 - 2380381, 94999 33471 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.