/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சர்வீஸ் ரோட்டை தவிர்க்கும் பஸ்கள்; விபத்து ஏற்படும் சூழலால் அச்சம் சர்வீஸ் ரோட்டை தவிர்க்கும் பஸ்கள்; விபத்து ஏற்படும் சூழலால் அச்சம்
சர்வீஸ் ரோட்டை தவிர்க்கும் பஸ்கள்; விபத்து ஏற்படும் சூழலால் அச்சம்
சர்வீஸ் ரோட்டை தவிர்க்கும் பஸ்கள்; விபத்து ஏற்படும் சூழலால் அச்சம்
சர்வீஸ் ரோட்டை தவிர்க்கும் பஸ்கள்; விபத்து ஏற்படும் சூழலால் அச்சம்
ADDED : மே 11, 2025 11:47 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி - கோவை இடையே பஸ்கள், அவ்வபோது, சர்வீஸ் ரோடு தவிர்த்து, பிரதான வழித்தடத்தில் நிறுத்தி பயணியரை, ஏற்றி இறக்க முற்படுவதால், விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தில் அதிகப்படியான கிராமங்கள் உள்ளதால், போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஆச்சிப்பட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில், சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைக்காக பஸ் பயணம் மேற்கொள்ளும் மக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, சர்வீஸ் ரோடு வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், சில பஸ் டிரைவர்கள், காலை மற்றும் மாலை நேரத்தில், சர்வீஸ் ரோட்டை தவிர்த்து, பிரதான வழித்தடத்திலேயே பஸ்சை நிறுத்தி, பயணியரை ஏற்றி, இறக்க முற்படுகின்றனர். அவ்வழியே, 80 கி.மீ., வேகம் கடந்து செல்லும் பிற வாகன ஓட்டுநர்கள் செய்வதறியாது திணறுகின்றனர். விபத்து அதிகரிக்கும் சூழல் ஏற்படுகிறது.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு, ஆச்சிப்பட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம், கல்லாங்காட்டுபுதுார், கிணத்துக்கடவு, மரத்தோப்பு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, சுந்தராபுரம், குறிச்சி ஆகிய 'ஸ்டேஜ்' ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சர்வீஸ் ரோடு வழியே சென்று, பயணியரை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். நேரமின்மையை சுட்டிக் காட்டி சில டிரைவர்கள், பிரதான வழித்தடத்திலேயே பஸ்களை நிறுத்துகின்றனர்.
இவ்வழியே நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரிக்கும் நிலையில், இத்தகைய அத்துமீறலை தடுக்க வேண்டும். சர்வீஸ் ரோடு வாயிலாக சென்று, பயணியரை ஏற்றி இறக்குவதை உறுதி செய்வதற்கு, துறை ரீதியான அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.