/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டடம் இடிந்தது; மரம் விழுந்து மின்கம்பம் முறிந்தது! காற்றுடன் மழை பெய்ததால் பாதிப்பு கட்டடம் இடிந்தது; மரம் விழுந்து மின்கம்பம் முறிந்தது! காற்றுடன் மழை பெய்ததால் பாதிப்பு
கட்டடம் இடிந்தது; மரம் விழுந்து மின்கம்பம் முறிந்தது! காற்றுடன் மழை பெய்ததால் பாதிப்பு
கட்டடம் இடிந்தது; மரம் விழுந்து மின்கம்பம் முறிந்தது! காற்றுடன் மழை பெய்ததால் பாதிப்பு
கட்டடம் இடிந்தது; மரம் விழுந்து மின்கம்பம் முறிந்தது! காற்றுடன் மழை பெய்ததால் பாதிப்பு
ADDED : மே 27, 2025 09:11 PM

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. விடாது, பெய்யும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை அடுத்த சேத்துமடை அண்ணாநகரில், வீடு ஒன்றின் கான்கிரீட் மேற்கூரை சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர், அப்பகுதி மக்களை, உண்டு உறைவிட பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைத்துள்ளனர். முகாமில், 30 ஆண்கள், 55 பெண்கள், 30 குழந்தைகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
வருவாய்த்துறையினர் கூறியதாவது:
இரவு நேரங்களில், காற்றுடன் கனமழை நீடிக்கிறது. ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. முன்னெச்சரிக்கையாக, அந்தந்த பகுதி மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
மழை வெள்ளத்தால் பேரிடர் ஏற்பட்டால், உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில், அவசர கால கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இம்மையத்தை, 0422 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, கூறினர்.
நெகமம்
நெகமத்திலிருந்து அரசு மருத்துவமனை அருகே, ரோட்டோரம் இருந்த பெரிய மரம் ஒன்று மழைக்கு சாய்ந்ததில், மின் கம்ப ஒயர்கள் அறுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது யாரும் செல்லாததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.
இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. மின்வாரியத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, ரோட்டின் நடுவே இருந்த மரத்தை அகற்றினர்.
வால்பாறை
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், காற்றின் வேகத்துக்கு, பல்வேறு இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோலையாறு அணைப்பகுதியில் வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்தது.
எஸ்டேட் பகுதியில் சில இடங்களில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால் அந்தப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கபட்டது. தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணிக்கு செல்லவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலாபயணியர் வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
உடுமலை
உடுமலையில், நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதில், உடுமலை பெரிய குளம் கரையில், வாளவாடி ரோட்டிலிருந்த பெரிய பனை மரம் வேருடன் சாய்ந்தது. அருகிலிருந்த இரு மின் கம்பங்கள் மீது விழுந்ததில், இரண்டு மின் கம்பங்களும் உடைந்து விழுந்தது.
இரவு நேரத்தில் இச்சம்பவம் நடந்ததால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லை. மின் கம்பங்கள் முறிந்ததால், மின் தடை ஏற்பட்டது.
அதே போல், போடிபட்டி ஊராட்சி அலுவலகம் ரோட்டில், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் காற்றிற்கு சாய்ந்து விழுந்தன. நேற்று காலை மின் வாரிய அதிகாரிகள் உடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணியில் ஈடுபட்டனர்.
- நிருபர் குழு -