ADDED : ஜன 04, 2024 10:38 PM

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரத்தில் கரடி நடமாட்டம் இருப்பதால், அப்பகுதி பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு பெட்டதாபுரம், சின்னையா தோட்டம் பகுதி, முத்தரையர் குடியிருப்பு பகுதி, ஆதிதிராவிடர் காலனி, வி.ஜி., நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கரடியின் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இங்குள்ள தோட்டம் ஒன்றில் பெருத்த உருவமுடைய கரடி ஒன்று அமர்ந்திருப்பதை சிலர் பார்த்துள்ளனர். இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'கரடியின் காலடித்தடங்கள் இப்பகுதியில் பதிந்து உள்ளன. பகல், இரவு நேரங்களில் இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பல்வேறு ஷிப்ட்களில் பணியாற்ற தொழிலாளர்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களில் சென்றும் வருகின்றனர். அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பு, கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.