Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு  . 200க்கு 200 பெற்று ஏழு பேர் முதலிடம் 

வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு  . 200க்கு 200 பெற்று ஏழு பேர் முதலிடம் 

வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு  . 200க்கு 200 பெற்று ஏழு பேர் முதலிடம் 

வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு  . 200க்கு 200 பெற்று ஏழு பேர் முதலிடம் 

ADDED : ஜூன் 26, 2025 02:26 AM


Google News
Latest Tamil News
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், இளநிலை முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல் நேற்று மாலை வெளியானது. இதில், ஏழு பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தை பெற்றுள்ளனர்.

வேளாண் பல்கலையின் கீழ், 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 6,921 இடங்களும், அண்ணாமலை பல்கலை வேளாண் படிப்புக்கு, 340 இடங்களும் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படவுள்ளன.

கடந்த, மே 9ம் தேதி முதல் ஜூன் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 37,007பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். இதில், 29,349 பேர் தகுதியானவர்கள்.

விண்ணப்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், அகாடமிக் பிரிவில் 27,823 பேரின் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 1266 பேர் தொழிற்கல்வி பிரிவில் தகுதி பெற்றுள்ளனர். பிற மாநிலங்களை சேர்ந்த 174 பேர் விண்ணப்பங்கள் மேனேஜ்மென்ட் பிரிவில் கீழ் வைக்கப்பட்டுள்ளன. தவறான சான்றிதழ் சமர்ப்பித்த, 86 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடலுார் ஆதிக்கம்


தரவரிசை பட்டியல் படி, விழுப்புரம் மாணவி திவ்யா, கடலுாரை சேர்ந்த மாணவிகள் ஹம்தா மெஹதாப், இலக்கியா, கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவன் பிரித்திவிராஜ், கடலுாரை சேர்ந்த கார்த்திகா, தீபிகா, கனிமொழி, விழுப்புரத்தை சேர்ந்த தாரணி, கடலுாரை சேர்ந்த பிரிமாதெலி, முரளிதரன் ஆகியோர், முதல் பத்து இடங்களை பெற்றுள்ளனர். முதல் பத்து இடங்களில், ஏழு பேர் கடலுார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள். இருவர் விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவிகள் ஆர்வம்


வேளாண் படிப்புகளுக்கு 18,453 மாணவிகளும், 9370 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர். ஆண்-பெண் விகித கணக்கீட்டின் படி, 508 க்கு 1000 என்ற அளவில் உள்ளது.

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவுகளின் கீழ், முன்னாள் ராணுவ வீரர் பிரிவில் 20 இடங்களுக்கு, 256 பேரும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 403 இடங்களுக்கு 9,902 பேரும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 20 இடங்களுக்கு 288 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 128 இடங்களுக்கு 132 பேரும், தொழில்முறை கல்வி இடஒதுக்கீட்டில் 223 இடங்களுக்கு 1266 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், விண்ணப்பங்கள் அதிகம் என்பதால் அதிக போட்டிகள் நிலவும். மொத்த விண்ணப்பங்களில், 34 சதவீதம் பேர் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வழி


வேளாண் பல்கலையின் கீழ், வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகள் தமிழ்வழி பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. தலா 50 வீதம், 100 இடங்கள் இதற்கு உள்ளன. தமிழ்வழி படிப்பில் சேர, 8293 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

'கலந்தாய்வு தேதிஅறிவிக்கப்படும்'


வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், '' கடந்தாண்டு மீன்வளப்பல்கலைக்கும் சேர்த்து, சேர்க்கை நடத்தப்பட்டது. தற்போது தனியாக நடத்தவுள்ளனர். நடப்பாண்டில், வேளாண் பல்கலை மற்றும் அண்ணாமலை பல்கலையின் வேளாண் படிப்புகளுக்கும் சேர்த்து சேர்க்கை ஒரு விண்ணப்ப அடிப்படையில் ஆன்லைன் கவுன்சிலிங் வாயிலாக நடைபெறும். வேளாண் பல்கலையில், 14 இளமறிவியல் படிப்பில், அரசு கல்லுாரிகளில், 2516 இடங்களும், தனியார் கல்லுாரிகளில் 4,405 இடங்களும் உள்ளன. தற்போது வழங்கப்பட்ட 'பிரேக்-அப்' தகவல்கள் அனைத்தும் அகாடமிக் பிரிவுக்கு உட்பட்டவை. தொழிற்கல்வி படிப்புகளுக்கான பிரேக்-அப் பின்னர் வழங்கப்படும். கலந்தாய்வு தேதி குறித்து ஆலோசனை நடந்து வருகிறது, '' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us