/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிராமங்களில் முளைக்கிறது மீண்டும், மீண்டும் விளம்பர பலகைகள்: காற்றில் பறக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவுகிராமங்களில் முளைக்கிறது மீண்டும், மீண்டும் விளம்பர பலகைகள்: காற்றில் பறக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவு
கிராமங்களில் முளைக்கிறது மீண்டும், மீண்டும் விளம்பர பலகைகள்: காற்றில் பறக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவு
கிராமங்களில் முளைக்கிறது மீண்டும், மீண்டும் விளம்பர பலகைகள்: காற்றில் பறக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவு
கிராமங்களில் முளைக்கிறது மீண்டும், மீண்டும் விளம்பர பலகைகள்: காற்றில் பறக்கும் மாவட்ட கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூன் 02, 2024 11:38 PM

வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், சாலைகளுக்கு அருகில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில், விளம்பர பலகைகள் வைக்க எவ்வித அனுமதியும் தரப்படுவதில்லை. ஆனால், அனுமதி இன்றி கட்டடங்களின் மேல் பகுதியில் மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
சிறை தண்டனை
சில மாதங்களுக்கு முன்பு கோவையில் அனைத்து பகுதிகளிலும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. தற்போது, லோக்சபா தேர்தல் நடத்தும் பணியில் அதிகாரிகளின் கவனம் திரும்பியதும், மீண்டும் விளம்பர பலகைகள் முளைக்க துவங்கி விட்டன.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படியும், விளம்பர பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம், 2023 ஏப்., 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்ற வேண்டும். அதேபோல உரிமைக்காலம் முடிந்த பின்பு சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை அகற்றப்பட வேண்டும். அகற்ற தவறினால் தொடர்பு உடைய உள்ளாட்சி அமைப்புகளே அவற்றை அகற்றி விடும். அதற்கான செலவினங்களை அந்தந்த நிறுவனங்களிடமிருந்து அல்லது தனி நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
விதிகளை மீறி செயல்படும் நிறுவனம், தனிநபர் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது, 25 ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு ஆண்டு சிறை தண்டனையோ அல்லது, 5000 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ சேர்த்து விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் வழக்கு
மேலும், இச்சட்டத்தின்படி வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட உள்ள அளவுகளில் மட்டுமே விளம்பர பலகைகள், பேனர்கள் ஆகியவை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
விளம்பர பலகைகள், பேனர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் காயம் அடைந்தாலோ அல்லது வேறு ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ, அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பர பலகைகள், பேனர்கள் ஆகியவை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள்.
மேலும், குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உரிய அனுமதி இல்லாமல், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வடமதுரையில் கட்டடங்களின் மீது விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ., காலனி ரயில்வே கேட் அருகே ராட்சத விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதே போல வட்டமலைபாளையம் பிரிவிலும் வைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பர பலகைகள் வைக்க ஊராட்சிகளின் சார்பில் அனுமதி வழங்கப்படவில்லை என, ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.