/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையிலிருந்து கூடுதல் விமானங்கள் இயக்கம்! விமான நிறுவனங்கள் உறுதிகோவையிலிருந்து கூடுதல் விமானங்கள் இயக்கம்! விமான நிறுவனங்கள் உறுதி
கோவையிலிருந்து கூடுதல் விமானங்கள் இயக்கம்! விமான நிறுவனங்கள் உறுதி
கோவையிலிருந்து கூடுதல் விமானங்கள் இயக்கம்! விமான நிறுவனங்கள் உறுதி
கோவையிலிருந்து கூடுதல் விமானங்கள் இயக்கம்! விமான நிறுவனங்கள் உறுதி
UPDATED : ஜூலை 03, 2024 06:26 AM
ADDED : ஜூலை 03, 2024 01:23 AM

கோவையிலுள்ள தொழில் அமைப்புகளின் கூட்டு முயற்சியால், கோவையிலிருந்து கூடுதல் விமானங்களை இயக்குவதற்கு விமான நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.
இந்திய தொழிற்கூட்டமைப்பின் கோவை மண்டலம், கொடிசியா, சீமா மற்றும் கொங்கு குளோபல் போரம் உள்ளிட்ட முக்கிய தொழில் அமைப்புகள் இணைந்து, 'கோயம்புத்துார் நெக்ஸ்ட்' என்ற கூட்டமைப்பை நிறுவி, கோவையின் வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதில், கோவையிலிருந்து விமான சேவைகளை அதிகப்படுத்த சிறப்பு முயற்சி எடுக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக, முக்கிய விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளை இந்த அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்தனர். கோவை சி.ஐ.ஐ., அலுவலகத்தில் நேற்று நடந்த இந்த சந்திப்பில், முக்கிய விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அவர்களிடம் கோவையிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கான விமான சேவையை அதிகப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
துபாய், தோஹாவுக்கு நேரடி விமான சேவைகளும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஓரிட நிறுத்த விமான சேவைகளையும் ஏற்படுத்த வேண்டுமென்பது, முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. புனே, கோவாவுக்கு கூடுதல் விமான சேவை, அகமதாபாத், கொல்கத்தா நகரங்களுக்கு, இணைப்பு விமான சேவைகளை ஏற்படுத்த வேண்டுமென்று, தொழில் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
வரும் ஆகஸ்ட்டிலிருந்து, கோவையிலிருந்து சிங்கப்பூருக்கு தினசரி சேவையை 'ஸ்கூட்' நிறுவனம் துவக்கும் என்று, அந்நிறுவனத்தின் அதிகாரி முரளி உறுதியளித்தார். கூடுமானவரை, 236 பயணிகளை ஏற்றிச் செல்லும் ஏ 321 ரக விமானத்தை இயக்கவும் நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்படும் என்ற உறுதியையும் அவர் தெரிவித்தார்.
புதிய விமானங்கள் விரைவில் வரவுள்ள நிலையில், அதிக வருவாய் தரக்கூடிய கோவையின் மீது அதிக கவனம் செலுத்தப்படும் என்று, ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (விற்பனைப் பிரிவு) பிரியதர்ஷன் உறுதி கூறினார். கடந்த ஓராண்டில், சென்னை, மும்பைக்கு இரண்டு, டில்லிக்கு ஒன்று என மூன்று நேரடி விமானங்களை, ஏர் இந்தியா இயக்கியதையும் அவர் குறிப்பிட்டார். அடுத்தகட்டமாக, கோவையிலிருந்து பெங்களூருவுக்கு இரண்டு நேரடி விமானங்கள் விரைவில் இயக்கப்படும் என்ற தகவலையும் அவர் பகிர்ந்து கொண்டார். இதனால் இங்கிருந்து வெளிநாடு செல்வோர் பெரிதும் பயன் பெறும் வாய்ப்புள்ளது.
கோவையில் இருந்து டில்லிக்கு அதிகாலை நேரடி விமான சேவை துவங்க வேண்டுமென்ற 'கோயம்புத்துார் நெக்ஸ்ட்' கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கோவையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் என்று, 'இண்டிகோ' நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் சீனிவாசன் உறுதியளித்தார். தோஹா, துபாய், சிங்கப்பூர், அபுதாபி மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து, மேலதிகாரிகளுடன் ஆலோசித்து தகவல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
சி.ஐ.ஐ., கோவை கிளை முன்னாள் தலைவர் அர்ஜுன் பிரகாஷ், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், கொங்கு குளோபல் போரம் இயக்குனர் சதீஷ், சீமா துணைத்தலைவர் மிதுன் ராமதாஸ், ஸ்ரீராம், கோவை நெக்ஸ்ட் வழிகாட்டுதல் குழு நிர்வாகிகள் ஸ்ரீகுமாரவேலு, அஷ்வின் மனோகர் ஆகியோர், இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
-நமது நிருபர்-