Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புலிகள் காப்பகத்தில் கூடுதல் தலைமைச்செயலர் ஆய்வு

புலிகள் காப்பகத்தில் கூடுதல் தலைமைச்செயலர் ஆய்வு

புலிகள் காப்பகத்தில் கூடுதல் தலைமைச்செயலர் ஆய்வு

புலிகள் காப்பகத்தில் கூடுதல் தலைமைச்செயலர் ஆய்வு

ADDED : ஜன 31, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் மற்றும் வனப்பகுதியில் பராமரிக்கும் புலி வனத்துக்குள் விடுவது குறித்து, தமிழக வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்தார்.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனச்சரக பகுதிகளில், தமிழக சுற்றுச்சூழல் பருவநிலை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு ஆய்வு செய்தார்.

ஆழியாறு சோதனைச்சாவடியில், பிளாஸ்டிக் பொருட்கள் அழித்தல் இயந்திரத்தை பார்வையிட்டு, பிளாஸ்டிக் பொருட்களை சோதனைச்சாவடி வழியாக கொண்டு செல்ல அனுமதிப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு சென்ற கூடுதல் தலைமைச் செயலாளர், அங்குள்ள பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அங்கு யானைகள் முகாமில் பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களான மாவூத்கள், யானை பாகன்களுக்கு குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

மேலும், டாப்சிலிப் கோழிகமுத்தி மற்றும் கூமாட்டி பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பயன்பாட்டுக்காக, வனத்துறை சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாகன சேவையை துவக்கி வைத்தார்.

உலாந்தி வழிச்சாலையில் உள்ள, கூமாட்டி பழங்குடியின மக்கள் குடியிருப்பு பகுதியை சுற்றிலும், காட்டு யானைகள் புகாத வகையில், அகழி அமைத்தல், தடுப்பு வேலி அமைத்தல், கழிப்பிட வசதி மற்றும் சோலார் மின் விளக்குகள் ஏற்படுத்துதல் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், வால்பாறை பகுதியில் தாயை விட்டு பிரிந்த, நான்கு மாத யானை குட்டியை மீண்டும் தாயுடன் சேர்த்த, வனச்சரகர் மணிகண்டன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழும், ரொக்கப்பரிசாக தலா, 5,000 ரூபாயும் வழங்கினார்.

மேலும், மானாம்பள்ளி மந்திரிமட்டம் பகுதியில், கூண்டில் வைத்து வனத்துறையினர் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் புலியை, நேரில் பார்த்தார்.

அதன் பராமரிப்பு குறித்தும், இந்த புலியினை பற்றி வனப்பகுதிக்குள் ஆய்வுகளையும் வனத்துறை அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

ஆய்வின் போது, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்க்கவே தேஜா உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us