/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அதிகாரிகளுக்கு ஆதரவாக புகழ் பாடும் சுவரொட்டி! பேருக்கு எப்.ஐ.ஆர்.,போடுவதால் நாறுது 'ஸ்மார்ட் சிட்டி'அதிகாரிகளுக்கு ஆதரவாக புகழ் பாடும் சுவரொட்டி! பேருக்கு எப்.ஐ.ஆர்.,போடுவதால் நாறுது 'ஸ்மார்ட் சிட்டி'
அதிகாரிகளுக்கு ஆதரவாக புகழ் பாடும் சுவரொட்டி! பேருக்கு எப்.ஐ.ஆர்.,போடுவதால் நாறுது 'ஸ்மார்ட் சிட்டி'
அதிகாரிகளுக்கு ஆதரவாக புகழ் பாடும் சுவரொட்டி! பேருக்கு எப்.ஐ.ஆர்.,போடுவதால் நாறுது 'ஸ்மார்ட் சிட்டி'
அதிகாரிகளுக்கு ஆதரவாக புகழ் பாடும் சுவரொட்டி! பேருக்கு எப்.ஐ.ஆர்.,போடுவதால் நாறுது 'ஸ்மார்ட் சிட்டி'
ADDED : ஜன 03, 2024 12:08 AM

-நமது நிருபர்-
கோவை நகரின் சுவர்களை அலங்கோலப்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பும் வகையிலும் போஸ்டர் ஒட்டுவோர், அதன் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு புகழ் பாடியும், போஸ்டர் ஒட்டத் துவங்கியுள்ளனர்.
கோவை நகரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
மாதிரிச்சாலை, குளங்கள் மேம்பாடு என்று மத்திய, மாநில அரசுகளால் பெருமளவில் நிதி செலவிடப்பட்டு, நகரம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து, இதற்கான பல பணிகளை மேற்கொள்கின்றன.
அரசு சுவர்கள், குடியிருப்புச் சுவர்கள், பாலங்கள் போன்ற இடங்களில், பாரம்பரியமான நினைவுச் சின்னங்கள் மற்றும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுகின்றன.
பூங்காக்களின் சுவர்களிலும், கோவையின் பெருமையை எடுத்துக்காட்டும் வகையில், பல்வேறு கலை வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன.
ஆனால் இவையனைத்தையும் சீர் குலைக்கும் வகையில், கோவை நகரில் போஸ்டர்கள் ஒட்டுவதும், பல மடங்கு அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, அவினாசி ரோடு பழைய மேம்பாலம், புதிய மேம்பாலம், வடகோவை மேம்பாலம் உள்ளிட்ட பாலங்கள், அரசு மற்றும் தனியார் சுவர்களில், மெகா சைஸ் போஸ்டர்கள் ஒட்டுவது, சமீபகாலமாக இரட்டிப்பாகியுள்ளது.
ஓர் உள்ளூர் பத்திரிகையின் பெயரில்தான், இந்த போஸ்டர்கள் தொடர்ச்சியாக ஒட்டப்படுகின்றன. தனிநபர்களின் பெயர்களையும், முகங்களையும் பெரிது பெரிதாகப் போட்டு, அவர்களுக்கு புகழ் பாடும் வகையிலான போஸ்டர்கள் மட்டுமின்றி, தனியார் நிகழ்ச்சிகள், வாகன விற்பனை குறித்த போஸ்டர்களும் பத்திரிகையின் பெயரைக் கொண்டு சுவர்களை நிறைக்கின்றன.
இந்த போஸ்டர்கள், அரசு சுவர்களை அலங்கோலப்படுத்துவது மட்டுமின்றி, முக்கிய சந்திப்புகளில், வாகன ஓட்டிகளின் கவனத்தையும் திசை திருப்புவதாகவுள்ளன.போஸ்டர்களால் கவனம் சிதறுவதால், நிறைய முட்டல், மோதல்கள், பிரச்னைகள், விபத்துகள், போக்குவரத்து நெரிசல் என பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாநகர போலீசார்தான்.
ஆனால் மாநகர போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலருக்கு, இந்த போஸ்டர்களை ஒட்ட அனுமதிப்பதற்காக, மாதந்தோறும் மாமூல் வாரி வழங்கப்படுகிறது.
இந்த மாமூலை வாங்க விரும்பாத உயரதிகாரிகளுக்கு, அவர்களின் முகங்களைப் பெரிதாகப் போட்டு, புகழ் பாடும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, வேறு விதமாக லஞ்சம் தரப்படுகிறது.
கடந்த வாரத்தில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் படம் போட்டு, நகரின் பல பகுதிகளிலும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இது, கோவை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. அதற்குப் பின்பே, அந்த போஸ்டர் ஒட்டிய உள்ளூர் பத்திரிகையின் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவெளி இடங்களின் அழகைச் சிதைப்பதைத் தடுக்கும் சட்டத்தின் (The Tamil Nadu Open places (Prevention of Disfigurement) Act 1959 பிரிவு 4ன் படி, இந்த வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
இதன்படி, அதிகபட்சம் மூன்று மாத சிறை அல்லது 200 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை கிடைக்கும். ஆனால் புகழ் விரும்பி போலீசார், சிறைத் தண்டனை வாங்கித்தருவார்களா என்பது சந்தேகமே.
மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, போலீசார் இணைந்து கடும் நடவடிக்கை எடுப்பதே, இதற்கு நிரந்தரத் தீர்வு!