Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாசாணியம்மன் திருவிழாவில் மயான பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாசாணியம்மன் திருவிழாவில் மயான பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாசாணியம்மன் திருவிழாவில் மயான பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாசாணியம்மன் திருவிழாவில் மயான பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு

ADDED : பிப் 24, 2024 01:56 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகேயுள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான மயான பூஜை நடந்தது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்றுமுன்தினம் நள்ளிரவு நடந்தது.

நள்ளிரவு மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடித்தவுடன், தலைமை முறைதாரர் மனோகர், மயான அருளாளி அருண் உள்ளிட்ட அருளாளிகள், அம்மனின் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் கோவிலிலிருந்து, ஆழியாற்றங்கரைக்கு சென்றனர்.

மயான பூஜைக்கு மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது.அருளாளி ஆற்றில் நீராடி தீர்த்தம் எடுத்து வந்தார். நள்ளிரவு, 2:50 மணிக்கு மேல் பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருஉருவத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

எலுமிச்சை மாலைகளால், அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாட, நேற்று அதிகாலை, 3:22 மணிக்கு அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் திருஉருவத்தில் இருந்து எலும்புத்துண்டை வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் பக்தி பரவசத்துடன் நடனமாடினார்.

அம்மனின் பட்டு சேலையில் பிடிமண் எடுக்கப்பட்டதும், அதிகாலை, 4:30 மணிக்கு மயான பூஜை நிறைவடைந்தது. பக்தர்கள், 'அம்மா தாயே... மாசாணி தாயே...' என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

நேற்று காலை, 7:00 மணிக்கு ஆழியாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது. இதில், அம்மன் திருஉருவத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது.

கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி, அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, டி.எஸ்.பி., ஸ்ரீநிதி தலைமையில் போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாளை பூமிதி விழா


இன்று காலை, 10:30 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் குண்டம் கட்டுதல், மாலை, 6:30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை (25ம்தேதி) காலை, கங்கணம் கட்டி விரதம் இருக்கும் ஆண் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குண்டம் மைதானத்தில் திருவிழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us