/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நொய்யலில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் நுரை பாயும் ஆறு! வாழ்வாதாரம் பாதிப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி நொய்யலில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் நுரை பாயும் ஆறு! வாழ்வாதாரம் பாதிப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி
நொய்யலில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் நுரை பாயும் ஆறு! வாழ்வாதாரம் பாதிப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி
நொய்யலில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் நுரை பாயும் ஆறு! வாழ்வாதாரம் பாதிப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி
நொய்யலில் ரசாயன கழிவு நீர் கலப்பதால் நுரை பாயும் ஆறு! வாழ்வாதாரம் பாதிப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : ஜூலை 17, 2024 11:51 PM

சூலுார் : நொய்யல் ஆற்றில் கழிவு நுரையுடன் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடுவதால், விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யலில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளன.
சூலுார் அடுத்துள்ள ராவத்தூர் தடுப்பணை நிரம்பி, ஆற்றில் வெள்ளம் செல்கிறது. பல மாதங்களுக்கு பிறகு ஆற்றில் வெள்ளம் செல்வதை காண சென்ற விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கழிவு மற்றும் நுரையுடன் செல்லும் ஆற்று நீரை கண்டு விரக்தி அடைந்தனர்.
நிலத்தடி நீர் மாசுபடுகிறது
இதுகுறித்து சூலுார் வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
ஒரு காலத்தில் கோவை மாவட்டத்தின் ஜீவ நதியாக நொய்யல் இருந்தது. இதனால், பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செழித்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டது. ஆனால், இன்று நொய்யல் ஆற்றில் பல்வேறு ரசாயனங்கள் கலந்த கழிவு நீர் தான் செல்கிறது. இதனால், நொய்யல் ஆற்றை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. கிணற்று நீரும் பாதிக்கப்பட்டு விட்டது.
தற்போது, நொய்யலில் நுரையுடன் கருப்பு நிறத்தில் ஓடும் தண்ணீரை பார்க்கும்போது, கண்ணீர் தான் வருகிறது. கழிவு நீரை ஆற்றில் விடுவதை தடுக்க வேண்டும் என, பல முறை அரசிடம் கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை. இன்றளவும் பல இடங்களில் கழிவு நீர் நேரடியாக நொய்யலில் கலக்கிறது. இருப்பது ஒரே ஒரு ஆறு. அதை பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும்.
இதை உணர்ந்து, நொய்யலை பாதுகாக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
யார் காரணம்
மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி, கோவை, திருப்பூர் மாவட்டங்களை கடந்து நொய்யல் ஆறு செல்கிறது. பல நூறு கி.மீ., பயணிக்கும் இந்த ஆறு, பிளாஸ்டிக், மருத்துவம், கட்டட கழிவுகளை கொட்டும் இடமாக மாறியுள்ளது. மேலும், தொழிற்சாலைகளில் இருந்து உருவாகும் ரசாயன கழிவுகளுடன் பயணிப்பது வேதனைக்குரியது.
தற்போது, பருவ மழை துவங்கியுள்ள நிலையில், ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதை பயன்படுத்தி, தொழிற்சாலைகள், சாய பட்டறைகளில் இருந்து சாயம், ஆயில் மற்றும் ரசாயன கழிவுகளை வெளியேற்றி வருவதாக புகார்கள் உள்ளன. மேலும், கோவை மாநகரம், மற்றும் புறநகர் பகுதிகள் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து உருவாகும் கழிவு நீரும் நொய்யல் ஆற்றில் தான் விடப்படுகின்றன. இதன் காரணமாக நொய்யல் ஆற்று நீர் நுரையுடன் கருப்பு நிறத்தில் பாய்கிறது. இவற்றை தடுத்தால் தான் நொய்யல் ஆறு காப்பாற்றப்படும்.