/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/முழு பலன்தராத 'நமது ஊர், நமது பள்ளி' திட்டம்முழு பலன்தராத 'நமது ஊர், நமது பள்ளி' திட்டம்
முழு பலன்தராத 'நமது ஊர், நமது பள்ளி' திட்டம்
முழு பலன்தராத 'நமது ஊர், நமது பள்ளி' திட்டம்
முழு பலன்தராத 'நமது ஊர், நமது பள்ளி' திட்டம்
ADDED : ஜூலை 14, 2024 08:45 AM

திருப்பூர்: தமிழக அரசின் 'நமது ஊரு; நமது பள்ளி' திட்டத்துக்கு, ஊர் மக்கள், தன்னார்வ அமைப்பினர் ஆதரவு அளிக்கின்றனர். அதே நேரம், காலியாக உள்ள ஆசிரியப்பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே, அரசின் நோக்கம் முழு வெற்றி பெறும் என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், பள்ளிகளை மேம்படுத்துவது, ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பது உள்ளிட்ட உட்கட்டமைப்புகளை பலப்படுத்தும் பணியில், மக்களின் பங்களிப்பை அரசு ஊக்குவிக்கிறது.
அந்தந்த பள்ளிகள் உள்ள ஊரில் வசிக்கும் பொதுமக்கள், பெருநிறுவனங்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவியுடன், பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, மாநிலத்தின் பல இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகள், பொலிவூட்டப்பட்டு வருகின்றன.
பள்ளி கட்டடம், வகுப்பறையை வர்ணம் தீட்டி சுத்தம் செய்வது, ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பது என, பல லட்சம் ரூபாய் செலவில், மக்களின் பங்களிப்புடன் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:
அரசுப் பள்ளிகளில் சில ஆண்டுகளாகவே ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படுகிறது. மேம்படுத்தப்படும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கிறது. இருப்பினும், பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாகவே இருக்கிறது; மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாக ஆசிரியர்களை நியமிப்பது வழக்கம்.
ஆனால், பள்ளி மேம்பாட்டுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழுவினர், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் நிதி பங்களிக்கின்றனர். இதற்கே பெரும் தொகையை அவர்கள் செலவிடும் நிலையில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்குவது, அவர்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது.
பள்ளி கட்டடங்கள், உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டாலும் கூட, தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லாததால், பெற்றோர் பலரும், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க தயக்கம் காண்பிக்கின்றனர். எனவே, காலிப்பணியிடம் நிரப்பப்பட்டால், அரசின் 'நமது ஊர்; நமது பள்ளி' திட்டத்தின் நோக்கம் முழு வெற்றியை தரும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.