/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 7வது நிதி ஆணையம் தமிழக அரசு நியமனம் 7வது நிதி ஆணையம் தமிழக அரசு நியமனம்
7வது நிதி ஆணையம் தமிழக அரசு நியமனம்
7வது நிதி ஆணையம் தமிழக அரசு நியமனம்
7வது நிதி ஆணையம் தமிழக அரசு நியமனம்
ADDED : மே 30, 2025 02:15 AM
சென்னை:உள்ளாட்சி அமைப்புகளின், நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து, மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து பரிந்துரை அளிக்க, ஏழாவது மாநில நிதி ஆணையத்தை, தமிழக அரசு அமைத்துள்ளது.
இந்த ஆணையமானது, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின், நிதி நிலைமை குறித்து ஆய்வு செய்து, மாநில அரசு வழங்க வேண்டிய நிதிப்பகிர்வு குறித்து, உரிய பரிந்துரைகளை வழங்கும். ஆணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
குழுவின் அலுவல் சாரா உறுப்பினராக, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், அலுவல் உறுப்பினர்களாக நகராட்சி நிர்வாக இயக்குனர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், பேரூராட்சிகளின் ஆணையர், உறுப்பினர் செயலராக நிதித்துறையின் வரவு - செலவு பிரிவு துணை செயலர் பிரத்திக் தயாள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆணையம், ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய குழுக்கள், மாவட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகியவற்றின் நிதிநிலையை ஆய்வு செய்து, மாநில அரசு விதிக்கத்தக்க வரிகள், தீர்வைகள், சுங்கங்கள், கட்டணங்கள் ஆகியவற்றின் நிகர வருவாயை, மாநில அரசுக்கும், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் இடையே பகிர்ந்து கொள்ளுதல்; வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய பங்கை, முறையே பிரித்தளித்தல், ஆகியவை குறித்து பரிந்துரை செய்யும்.
அத்துடன், உள்ளாட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட கூடிய வரிகள், தீர்வைகள், சுங்கங்கள் மற்றும் கட்டணங்கள் ஆகியவற்றை தீர்மானித்தல், மாநில அரசின் தொகுப்பு நிதியில் இருந்து உள்ளாட்சிகளுக்கு மானிய உதவிகள் வழங்குதல், ஆகியவை குறித்தும் பரிந்துரை செய்யும்.
வரும், 2027 ஏப்., முதல் தேதியில் இருந்து துவங்கும், ஐந்து ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில், இந்த ஆணையம், 2026 ஆக., 31க்குள் தன் அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.