Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/புகார் பெட்டி வாயிலாக 6,000 மனுக்கள் அமைச்சர் முத்துசாமி தகவல்

புகார் பெட்டி வாயிலாக 6,000 மனுக்கள் அமைச்சர் முத்துசாமி தகவல்

புகார் பெட்டி வாயிலாக 6,000 மனுக்கள் அமைச்சர் முத்துசாமி தகவல்

புகார் பெட்டி வாயிலாக 6,000 மனுக்கள் அமைச்சர் முத்துசாமி தகவல்

ADDED : ஜன 12, 2024 12:57 AM


Google News
கோவை;''வீட்டு வசதி வாரிய அலுவலகங்களில் வைக்கப்பட்ட புகார் பெட்டிகள் வாயிலாக, 6,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன,'' என, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

கோவை மாநராட்சி பிரதான அலுவலகத்தில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கென்று ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட, 10 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்களை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று துவக்கிவைத்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தற்போது, டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில் பொது மக்களும் வீட்டு வளாகங்களில் தண்ணீர் தேங்காது தடுப்பு நடவடிக்கைகளுக்குஒத்துழைப்பு தர வேண்டும். காஞ்சிபுரம், சென்னை, துாத்துக்குடியில் கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

குப்பையில் இருக்கும் 'பிளாஸ்டிக்' கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு பாதிப்பு அதிகமாக இருந்தது. இதை தவிர்க்க சாக்கடை, நீர் வழித்தடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, துாய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து தர வேண்டும்.

பொங்கல் பரிசு தருவதில் இருக்கும் சிறு குறைபாடுகள் முதல்வரின் கவனத்துக்கு சென்றவுடன், யாரையும் தவிர்க்காது கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு 'டாஸ்மாக்' விற்பனை இலக்கை நாங்கள் நிர்ணயிக்கவில்லை. 'டாஸ்மாக்' செல்பவர்கள் வேறு எங்கும் தவறான இடத்துக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக புள்ளி விபரங்கள் வைத்து கண்காணிக்கிறோம்.

சிங்காநல்லுார் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 200 வீடுகளுக்கு ஆவணங்கள் இல்லாததால் யாருக்கு சொந்தமானது என்ற சிக்கல் உள்ளது. இதற்கு தீர்வு கண்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

வீட்டு வசதி வாரிய அலுவலகங்களில் வைக்கப்பட்ட புகார் பெட்டிகள் வாயிலாக, 6,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கென அமைக்கப்பட்ட குழுவானது நுாறு, நுாறு மனுக்களாகஆய்வு செய்து, எங்களுக்கு அனுப்பும் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.

அதேபோல், பயனாளிகள் தொடுத்த வழக்குகள் மீதான நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தவும் வாரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us