/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பி.ஏ.பி., கால்வாயில் 35 சதவீதம் நீர் இழப்பு: அதிகாரி தகவலால் விவசாயிகள் கொதிப்புபி.ஏ.பி., கால்வாயில் 35 சதவீதம் நீர் இழப்பு: அதிகாரி தகவலால் விவசாயிகள் கொதிப்பு
பி.ஏ.பி., கால்வாயில் 35 சதவீதம் நீர் இழப்பு: அதிகாரி தகவலால் விவசாயிகள் கொதிப்பு
பி.ஏ.பி., கால்வாயில் 35 சதவீதம் நீர் இழப்பு: அதிகாரி தகவலால் விவசாயிகள் கொதிப்பு
பி.ஏ.பி., கால்வாயில் 35 சதவீதம் நீர் இழப்பு: அதிகாரி தகவலால் விவசாயிகள் கொதிப்பு
ADDED : ஜன 02, 2024 11:33 PM
- நமது நிருபர் --
பி.ஏ.பி., திட்டத்தில், 35 சதவீதம் தண்ணீர் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்ததால், ஆதாரம் கேட்டு விவசாயிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், பி.ஏ.பி., பகிர்மான குழு தலைவர் கோபால் பேசியதாவது:
பி.ஏ.பி., திட்டம், நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, மண்டலத்துக்கு, 95 ஆயிரம் ஏக்கர் வீதம், பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. மூன்றே கால் லட்சம் ஏக்கர் பாசன பரப்புள்ள நிலையில், அமைதியாக நீர் நிர்வாகம் சிறப்பாக நடைபெறவேண்டும் என்பதற்காக ஒத்துழைப்போடு விவசாயிகள் செயல்பட்டு வருகிறோம்.
குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி, மகசூல் எடுக்கிறோம். காங்கயத்தின் ஒருபகுதி முதல் உடுமலை, பொள்ளாச்சி வரையிலான விவசாயிகள் மவுனம் சாதித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், சில விவசாய அமைப்புகள், விவசாயிகளை பிளவு படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளன. ஒருசாரர் மட்டும் தங்களுக்கு உரிய பங்கு தண்ணீர் என முறையற்ற வகையில், கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
பி.ஏ.பி., கிளை வாய்க்கால் முழுவதும் கான்கிரீட் அமைத்து, தண்ணீர் இழப்பை கட்டுப்படுத்தினால், இப்பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் மகேந்திரன், ''பி.ஏ.பி., கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரில், 35 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. பி.ஏ.பி., கிளை வாய்க்கால் சீரமைப்பதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளது.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்வதை குறைத்துக்கொண்டு, அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்றார்.
அதிகாரியின் பதிலால் டென்ஷனான விவசாயிகள், 'அது எப்படி, பி.ஏ.பி.,ல், 35 சதவீதம் தண்ணீர் இழப்பு ஏற்படுகிறது; அதற்கான அரசு ஆவணங்களை காட்டுங்கள்; பார்ப்போம்.
தங்களுக்கு உரிய பங்கு தண்ணீரை கேட்டுதானே விவசாயிகள் போராடுகின்றனர்? நியாயமான கோரிக்கைக்காக போராடக்கூடாதா?' என, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் இந்த கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், அதிகாரிகள் மவுனமாகினர்.