/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவிநாசி சாலை புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? அவிநாசி சாலை புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
அவிநாசி சாலை புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
அவிநாசி சாலை புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
அவிநாசி சாலை புதிய மேம்பாலம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
ADDED : ஜூன் 06, 2024 06:44 AM

கோவை : கோவை- - அவிநாசி சாலை, உப்பிலிபாளையத்திலிருந்து சின்னியம்பாளையம் வரை, 10.1 கி.மீ. தொலைவிற்கு 1,621.30 கோடி ரூபாயில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிச.,ல் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் துவங்கியது.
மேம்பாலம், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. பெட்டி வடிவத்தில் கான்கிரீட் கர்டர்கள் தயாரிக்கப்பட்டு, செக்மென்ட் தொழில் நுட்ப முறையில், சாலைக்கான ஓடுதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
10.5 மீட்டர் அகலத்தில் சாலையின் இருபக்கங்களிலும், சர்வீஸ் சாலைகளும், ஒன்றரை மீட்டர் அகலத்தில் மழை நீர் வடிகால் மற்றும் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது.
மக்கள் சிரமமின்றி சாலையைக் கடக்க, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.எச்., மருத்துவமனை, ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி. கல்லுாரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய 5 பகுதிகளில் சுரங்க நடைபாதை மற்றும் உயர்மட்ட நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, மேம்பால பயணத்தின் போது இறங்கி ஏறும் வகையில் சாய்தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேம்பால கட்டுமானப்பணிகளை, வரும் ஆகஸ்ட்டிற்குள் முடிக்க திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் பல்வேறு காரணங்களால், திட்டமிட்டபடி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் பணிகளை விரைவாகவும், வேகமாகவும் முடிக்க, மாநில நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் முடிவு செய்து பணிகளை வேகப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் அகிலா கூறியதாவது:
கோவை - அவிநாசி சாலையில் அமைக்கப்பட்டு வரும் 10.1 மீட்டர் துாரம் கொண்ட மேம்பாலப்பணிகள், வேகமாக நடந்து வருகிறது.
நவ இந்தியா மற்றும் பி.எஸ்.ஜி.,டெக் ஆகிய இரண்டு இடங்களில் மட்டும், மேல்தளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மொத்தம், 74 கான்கிரீட் கர்டர்கள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையிலுள்ளன. மற்ற இடங்களில் மேல்தளம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
தற்போது அவிநாசி சாலை உப்பிலிபாளையத்தில், மேம்பாலத்தின் ஏறு தளத்தின் இரு பகுதிகளிலும், 272 மீட்டர் நீளம், 7 மீட்டர் அகல அளவில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அனைத்துப்பணிகளையும் விரைந்து முடித்து, வரும் டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.