Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிரதமர் மோடியிடம் எதிர்பார்ப்பது என்னென்ன? கோவை தொழில் துறையினர் பட்டியல்

பிரதமர் மோடியிடம் எதிர்பார்ப்பது என்னென்ன? கோவை தொழில் துறையினர் பட்டியல்

பிரதமர் மோடியிடம் எதிர்பார்ப்பது என்னென்ன? கோவை தொழில் துறையினர் பட்டியல்

பிரதமர் மோடியிடம் எதிர்பார்ப்பது என்னென்ன? கோவை தொழில் துறையினர் பட்டியல்

ADDED : ஜூன் 12, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
கோவை:மத்தியில் புதிதாக பொறுப் பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை, கோவைக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை, தொழில்துறையினர் பட்டியலிட்டு உள்ளனர்.

எங்கள் தேவைகளை கேளுங்கள்


மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு மாநில தலைவர் ஜெயபால் கூறியதாவது:

மற்ற மாநிலங்களுக்கும், நமது மாநிலத்துக்கும் இடையே, ஒரு கிலோ நுாலுக்கு சாயமேற்றுவதில், 200-350 ரூபாய் வரை வித்தியாசம் ஏற்படுகிறது. அம்மாநில நிறுவனங்களுடன், எங்களால் போட்டி போட முடிவதில்லை.

தமிழகத்துக்கு தேவையான 96 சதவீத பருத்தியை, செயற்கை இழையை வேறு மாநிலத்தில் இருந்து தருவிக்கிறோம். ஸ்பின்னிங் மில்கள் மற்றும் ஓ.இ., மில்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் பருத்தி மற்றும் செயற்கை இழைகளை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவினம் அதிகமாகிறது.

சாயமேற்றுவதற்கு மீண்டும் வடமாநிலங்களுக்கு ஜவுளியை அனுப்புவதால், உற்பத்தி செய்வதற்கு போக்குவரத்துக்காக மட்டும், 40 சதவீதம் செலவிடுகிறோம்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தேவைகளை மத்திய - மாநில அரசுகள் கேட்டறிந்து, நிறைவேற்றித் தர வேண்டும்.

மூலப்பொருட்கள் மற்ற மாநிலங்களில் என்ன விலைக்கு கிடைக்கிறதோ, அதே விலைக்கு தமிழகத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும்.

பருத்தி, விஸ்கோஸ், பாலியஸ்டர் போன்ற சர்வதேச நாடுகளை காட்டிலும், நமது நாட்டில் விலை அதிகம். இவற்றை விற்பதற்கு போட்டியாளர்களை உருவாக்கினால் மட்டுமே, சர்வதேச நாடுகளின் விலைக்கு கிடைக்கும். இறக்குமதி வரிக் கொள்கைகளை இலகுவாக்கிக் கொடுத்தால், மூலப்பொருட்களை தருவிக்க முடியும்.

கடன் அட்டை வழங்கணும்


கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில்கள் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார்: ஜாப் நிறுவனங்களுக்கான 12 சதவீத ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கோவையில் உள்ள 'செயில் யார்டு' ஐந்தாண்டுகளாக மூடிக்கிடக்கிறது. அதை மீண்டும் திறந்து, மொத்தமாகவும், சில்லறையாகவும் சரியான, நியாயமான விலைக்கு மூலப்பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு கிசான் அட்டை வழங்கியிருப்பது போல், எம்.எஸ்.எம்.இ., நிறுவனத்தைச் சேர்ந்தோருக்கு மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வதற்காக, கடன் அட்டை வழங்க வேண்டும்.

உற்பத்தி சார்ந்த பொதுத்துறை நிறுவனம் ஒன்றை, கோவையில் உருவாக்க வேண்டும். அதிக வேலைவாய்ப்புத் தரக்கூடிய, எம்.எஸ்.எம்.இ., துறைக்கென பிரத்யேகமாக தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.

அவகாசம் அவசியம்


தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் விக்னேஷ்: பம்ப் உற்பத்தியில், பி.இ.இ., மற்றும் பி.ஐ.எஸ்., தரக்குறியீடு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். இரு தரச்சான்றுகளும் பெறுவது வெவ்வேறு துறையாக இருக்கிறது; எளிமைப்படுத்துவதற்கான பணி மேற்கொள்ள வேண்டும்.

எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், 45 நாட்களுக்குள் 'பேமென்ட்' செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அவ்வாறு செய்யவில்லை எனில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, செலவுக்கான பில்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்கிறார்கள்.

இந்நடைமுறையை, பெரிய நிறுவனங்களுக்கு அமல்படுத்தி பார்க்க வேண்டும். எம்.எஸ்.எம்.இ., நிறுவனத்தில் இருந்து, இன்னொரு எம்.எஸ்.எம்.இ., நிறுவனத்துக்கு பொருட்கள் சப்ளை செய்யும்போது, பேமென்ட் இடைவெளி, 90 நாட்களாக இருக்கிறது. இதை உடனடியாக குறைக்க முடியாது. அதனால், மூன்று ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும்.

வரிச்சலுகை கொடுங்க!


கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க (கோஜிமா) தலைவர் ரவி: 18 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கிரில் பேப்ரிகேஷன் தொழில் செய்வோருக்கு, 500 யூனிட் மின்சாரம் இலவசமாக தர வேண்டும். பிரத்யேகமாக தொழில்பேட்டை உருவாக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு அளிக்கிறோம் என்பதால், வரிச்சலுகை, மின் கட்டண சலுகை அளிக்க வேண்டும். வங்கி கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இவ்வாறு, தொழில்துறையினர் கூறினர்.

வட்டிச்சலுகை தரணும்

கோயமுத்துார் வெட்கிரைண்டர் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கவ்மா) தலைவர் பாலசந்தர் கூறுகையில், ''வெட்கிரைண்டர் தயாரிப்புக்கான ஜி.எஸ்.டி., 5 சதவீதமாக இருந்தது; 18 சதவீதமாக உயர்த்தியதால், தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மீண்டும், 5 சதவீதமாக குறைக்க வேண்டும். காப்பர் விலை அபரிமிதமாக உயர்ந்து கொண்டே செல்கிறது; விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கு வழங்குவது போல், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கும், 6 சதவீத வட்டியில் வங்கி கடன் வழங்க வேண்டும்,'' என்றார்.



வரியை குறைக்கணும்!

கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது:விவசாய பயன்பாட்டுக்கான, 5 எச்.பி., வரையிலான மோட்டார் பம்ப்புகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொள்முதலுக்கும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,; விற்பனைக்கும், 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்துக்கு மிக முக்கியமான கருவி மோட்டார் பம்ப் செட். விவசாயப் பணி மட்டுமின்றி, குடிநீர் உபயோகம் மற்றும் தொழில்துறைக்கு மோட்டார் பம்ப் பயன்பாடு மிக முக்கியமானதாக இருகக்கிறது. காப்பர், அலுமினியம் உள்ளிட்ட உதிரிபாகங்களுக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் பம்ப் மற்றும் உதிரி பாகங்களுக்கான ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.கூலிக்கு வேலை செய்யும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு, மாநில வரி 6 சதவீதம்; மத்திய வரி 6 சதவீதம் என, 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது; இவ்வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us