/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிறகொடிந்து போனாலும் நாங்க இருக்கோம்! பாதுகாக்கிறது பறவைகள் மறுவாழ்வு மையம் சிறகொடிந்து போனாலும் நாங்க இருக்கோம்! பாதுகாக்கிறது பறவைகள் மறுவாழ்வு மையம்
சிறகொடிந்து போனாலும் நாங்க இருக்கோம்! பாதுகாக்கிறது பறவைகள் மறுவாழ்வு மையம்
சிறகொடிந்து போனாலும் நாங்க இருக்கோம்! பாதுகாக்கிறது பறவைகள் மறுவாழ்வு மையம்
சிறகொடிந்து போனாலும் நாங்க இருக்கோம்! பாதுகாக்கிறது பறவைகள் மறுவாழ்வு மையம்
ADDED : ஜூன் 08, 2024 01:52 AM

கோவை;கோவை வனக்கல்லூரி வளாகத்தில், 'பறவைகள் மறுவாழ்வு மையம்' செயல்படுகிறது. வனத்துறையால் பராமரிக்கப்படும் இந்த மையம், நோயுற்ற, காயமுற்ற பறவைகளைப் பராமரித்து பாதுகாத்து, மீண்டும் வாழிடத்தில் விடும் பணிகளைச் செய்து வருகிறது.
கோவை தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், “பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் பறவைகளைக் காப்பாற்றுவதற்காக, பறவைகள் மறுவாழ்வு மையம் துவக்கப்பட்டது.
நோயுற்ற பறவைகள், அடிபட்ட, காயமுற்ற பறவைகள், எலும்பு முறிவுற்றவை, தாய்ப்பறவைகளால் தனித்து விடப்பட்ட குஞ்சுகள், வளர்க்க தடை செய்யப்பட்ட, விற்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை, வீடுகளில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட பறவைகளை மீட்டு, அவற்றுக்கான இயற்கை வாழிடங்களில் மீண்டும் விடுவதே, இதன் பிரதான நோக்கம். ஆயிரக்கணக்கான பறவைகளுக்கும், சிறு பாலூட்டிகளுக்கும் இம்மையம் மறுவாழ்வு அளித்துள்ளது,” என்றார்.
இந்த மையத்தைப் பராமரிக்க, வனத்துறைக்கு 'அனிமல் ரெஸ்க்யூயர்' உதவியாக உள்ளது. இந்த அமைப்பின் நிர்வாகிகளுள் ஒருவரான வின்னி பீட்டர் கூறியதாவது:
2012 முதல் இந்த மையம் செயல்படுகிறது. மிக மோசமான நிலையில் மீட்டு வரப்படும் பறவைகளுக்கு, மருத்துவ சிகிச்சை அளித்து பராமரிக்கிறோம். சத்தான உணவு கொடுத்து அவை, சுயமாக வாழும் திறன் பெற்றதும், அதற்கான வாழ்விடங்களில் விடுவிக்கிறோம்.
கிளி உள்ளிட்ட வளர்ப்பு பறவைகளின் சிறகுகள், அலகு, நகங்களை வெட்டி இருப்பர். அவற்றை அப்படியே வனப்பகுதியிலோ, வேறு வாழிடங்களிலோ விடுவித்தால், அவற்றால் வாழ முடியாது. எனவே, சிகிச்சையளித்து, உணவு கொடுத்து பராமரித்து, பறந்து தானாக இரைதேடும் அளவுக்கு வந்ததும் விடுவிக்கிறோம்.
நீண்ட காலம் வீட்டிலேயே வளர்க்கப்பட்ட கிளிகளை விடுவித்தாலும், தானாக இரைதேட முடியாது. அதுபோன்ற பறவைகளை, நாங்களே தொடர்ந்து பராமரிக்கிறோம். இதுவரை 110 வகையான பறவைகளை மீட்டு, பராமரித்து விடுவித்துள்ளோம். மஞ்சள் பாறு, கரும்பருந்து, பெலிக்கன், கழுகு வகைகள், ஆந்தைகளை மீட்டு பராமரித்துள்ளோம். மயில், புறா, கிளி, மைனா, ஆந்தை, காகம், குயில் போன்ற பறவைகள்தான், அதிகமாக மீட்கப்படுகின்றன.
பறவைகள் தவிர, தேவாங்கு, கீரி, மரநாய் போன்ற சிறு பாலூட்டிகளையும் மீட்டு பராமரிக்கிறோம். பறவைகள், சிறு பாலூட்டிகள் தானாக இரைதேடும் அளவுக்கு வந்ததும், வனத்துறையினர் அவற்றை உரிய வாழிடத்தில் விடுவிப்பர்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.