/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வடவள்ளி புனித அந்தோணியார் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம் வடவள்ளி புனித அந்தோணியார் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
வடவள்ளி புனித அந்தோணியார் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
வடவள்ளி புனித அந்தோணியார் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
வடவள்ளி புனித அந்தோணியார் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றம்
ADDED : ஜூன் 05, 2024 11:13 PM
கோவை: வடவள்ளி புனித அந்தோணியார் கோவில் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது; வரும் ஞாயிறன்று தேர்த்திருவிழா நடக்கிறது.
கோவை, வடவள்ளி-மருதமலை ரோட்டில் புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது. வடவள்ளி, வீரகேரளம், வேடபட்டி, பொம்மணம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல நுாறு கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பங்கள், இந்த ஆலயப் பங்கில் இடம் பெற்றுள்ளன. இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா, ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் நடக்கிறது.
நடப்பாண்டுக்கான தேர்த்திருவிழா, கடந்த ஜூன் 2 ஞாயிறு, கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவை கத்தோலிக்க மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ், திருப்பலி நிறைவேற்றி கொடியேற்றி வைத்தார்.
கடந்த ஜூன் 4 காலை 11:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தது. மதியம் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.
திருவிழா தயாரிப்பாக, நேற்றிலிருந்து நாளை வரையிலும் தினமும் மாலை 6:00 மணிக்கு, ஊட்டி மறை மாவட்ட அருட்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை நிகழ்த்துகிறார்.
திருவிழா நாளான ஜூன் 9 காலை 7:45 மணிக்கு, கோவை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ் தலைமையில், கூட்டுப்பாடற் திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது.
அதில் திவ்ய நற்கருணை மற்றும் உறுதி பூசுதல் ஆகிய அருட்சாதனங்கள் வழங்கப்படவுள்ளன. அன்று மாலை 5:30 மணிக்கு, ஒத்தக்கால் மண்டபம் பங்குத்தந்தை ஜாய் ஜெயசீலன் தலைமையில், மேட்டுப்பாளையம் வட்டார குருக்கள் மற்றும் தோழமை குருக்கள் இணைந்து, திருப்பலி நிறைவேற்றவுள்ளனர். அதைத் தொடர்ந்து, தேர்பவனி மற்றும் நற்கருணை ஆசீர் நடைபெறும்.
ஜூன் 16 காலை 8:00 மணிக்கு, அச்சரப்பாக்கம் அருட்தந்தை ரொசாரியோ தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்ட பின் கொடியிறக்கப்படும்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை, வடவள்ளி புனித அந்தோணியார் தேவாலய பங்குத்தந்தை வல்சஸ் எட்வர்டு விமல் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.