/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரூ.63 கோடியில் 'உக்கடம் லேக் வியூ' திட்டம்; பயனாளிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் ரூ.63 கோடியில் 'உக்கடம் லேக் வியூ' திட்டம்; பயனாளிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம்
ரூ.63 கோடியில் 'உக்கடம் லேக் வியூ' திட்டம்; பயனாளிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம்
ரூ.63 கோடியில் 'உக்கடம் லேக் வியூ' திட்டம்; பயனாளிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம்
ரூ.63 கோடியில் 'உக்கடம் லேக் வியூ' திட்டம்; பயனாளிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம்
ADDED : ஜூலை 24, 2024 11:49 PM
கோவை : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 'உக்கடம் லேக் வியூ' திட்டத்தில், ரூ.63.84 கோடியில், 672 வீடுகள் கட்டுவதற்கு, அப்பகுதி பயனாளிகளிடம் கருத்தறியும் கூட்டம் நடத்தப்பட்டது.
உக்கடம் - செல்வபுரம் பைபாஸில், சில்லறை மீன் மார்க்கெட் அருகே நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. இதற்கு அருகாமையில், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. மிகவும் பழமையானதாகி விட்டதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளன.
அவற்றை இடித்து விட்டு, அதே இடத்தில், 'அனைவருக்கும் வீடு' திட்டத்தில், 'உக்கடம் லேக் வியூ' என்ற பெயரில், 672 வீடுகள் கட்டுவதற்கு, 2019-2020வது நிதியாண்டில், அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.63.84 கோடி ஒதுக்கப்பட்டது.
அவ்வீடுகளை காலி செய்து கொடுக்க, உரிமையாளர்கள் தாமதித்து வருகின்றனர். திட்டத்தை கைவிடுவதற்கு முன், அப்பகுதி பயனாளிகளிடம் கருத்து கேட்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்க, நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, உக்கடம் லேக் வியூ பயனாளிகளிடம் கருத்தறியும் கூட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது.
அப்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினர் கூறும்போது, 'அனைவருக்கும் வீடு திட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் முடிகிறது. மறுகட்டுமானம் செய்வதற்கு இவ்வாண்டே இறுதியானதாகும். எதிர்காலத்தில் அரசின் மானியத்துடன் குடியிருப்புகள் கட்ட இயலாது.
வீட்டு வசதி வாரிய, 246 குடும்பங்களுக்கு கருணைத்தொகை வழங்கப்படும். லிப்ட் வசதியுடன் தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடிகளுடன், 672 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்' என்றனர்.
வீடுகளை காலி செய்து கொடுக்க தயாராக உள்ள அப்பகுதி மக்கள், தற்காலிகமாக தங்குவதற்கு கூடாரம் அமைத்துக் கொடுக்க வேண்டும்; உக்கடம் புல்லுக்காடு மைதானத்தில் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு மாடலில், கட்டிக் கொடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், தரைத்தளம் மற்றும் மூன்று மாடிகள் மட்டும் கட்ட வேண்டுமென கூறினர். இதுதொடர்பாக, நகர்ப்புற மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.