ADDED : ஜூலை 25, 2024 11:28 PM

கோவை : ஆடி மாதத்தில் ஜவுளிக்கடைகளை போல நகை கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. தள்ளுபடி ஏதும் அறிவிக்காமலேயே தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு மகளிர் ஆர்வம் காட்டினர்.
தங்கத்திற்கு இறக்குமதி வரியாக, 15 சதவீதம் அதனுடன், 3 சதவீதம் ஜி.எஸ்.டி.,என்று மொத்தம்,18 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி, 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பு காரணமாக நேற்று முன் தினம் ஆபரண தங்கம் ஒரு பவுன் விலை 52,400 ரூபாயிலிருந்து குறைந்து நேற்று 51,920 க்கு விற்றது. வாடிக்கையாளருக்கு ஜூவல்லரிகளை பொறுத்து பவுனுக்கு, 480 ரூபாய் குறைந்துள்ளது. பட்ஜெட் அறிவிப்பிற்கு பின்பு தங்கம் விலை பவுனுக்கு, 3,000 ரூபாய் வரை குறைந்துள்ளது.
இது குறித்து தங்க ஆபரணங்கள் விற்பனையாளர்கள் கூறியதாவது: நியாயமாக வியாபாரம் செய்யும் நகை வியாபாரிகளிடம் ஹால்மார்க், எச்.யு.ஐ.டி., முத்திரையை கட்டாய படுத்தியதாலும், ஜி.எஸ்.டி.,அமல்படுத்தியதாலும் தங்கநகை வியாபாரம் சுணங்கியிருந்தது.
தங்க நகை வியாபாரிகளின் புலம்பல், அழுத்தம் ஆகியவை மத்திய அரசுக்கு வரியை குறைக்க நிர்பந்தம் ஏற்படுத்தியது.
இந்த கோரிக்கையை அரசால் தொடர்ந்து புறக்கணிக்கவும் முடியவில்லை. ஆகையால் இந்த வரி குறைப்பு அறிவிப்பு தங்க வியாபாரம் செய்வோர்க்கு கிடைத்த வெற்றி மற்றும் ஊக்கம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழ்நாடு தங்க நகை வியாபாரிகள் சம்மேளனத் தலைவர் சபரிநாத் கூறுகையில், 'தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை குறையும். தங்கம் வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விற்பனை அமோகமாக இருக்கும்' என்றார்.