Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மெல்ல தலைதுாக்கும் குடிநீர் பிரச்னை; உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறல்

மெல்ல தலைதுாக்கும் குடிநீர் பிரச்னை; உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறல்

மெல்ல தலைதுாக்கும் குடிநீர் பிரச்னை; உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறல்

மெல்ல தலைதுாக்கும் குடிநீர் பிரச்னை; உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறல்

ADDED : மார் 14, 2025 10:38 PM


Google News
பொள்ளாச்சி; வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், போதுமான அளவில் தண்ணீர் வினியோகிக்க முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

பொள்ளாச்சி, ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள மாநில பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதேபோல, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள், ஆழியாறு அணையின் தண்ணீரை நம்பியே உள்ளன.

ஆனால், மழையின்மை காரணமாக, அணைக்கான நீர் வரத்து நாளுக்குள் நாள் குறைந்து வருகிறது. பாசனத்துக்கு வழங்குவதால், அணை நீர்மட்டமும் சரிந்து வருகிறது. ஆழியாறு அணையின் 120 அடி உயரத்தில், நேற்று காலை நிலவரப்படி, 73.45 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

அணைக்கு, வினாடிக்கு, 726 கனஅடி தண்ணீர் வரத்து உள்ள நிலையில், அளவு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு இருந்தும், அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து, போதுமான அளவில் தண்ணீர் எடுத்து சப்ளை செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

சில ஊராட்சிகளில், மேல்நிலை நீர் தேக்கதொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில், காலை இரண்டு மணி நேரம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில வாரங்களாக, குடிநீர் வினியோக நாட்களின் இடைவெளி அதிகரித்துள்ளது.

போதுமான அளவில் தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியாததால், 10 நாட்களுக்கு ஒரு முறை, ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்களும், தண்ணீரை, விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

ஊராட்சி, பேரூராட்சிகளில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடிநீர் வினியோகம் செய்ய மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்படுவதும் கிடையாது. முறையான பராமரிப்பு இல்லாததால், பல இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

இதன் காரணமாகவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் சப்ளை இருப்பதில்லை. கோடை காலம் துவங்குவதற்குள், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us