/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அமைச்சரே சொல்லிட்டாரு... இன்னும் ஏன் தயங்குறீங்க! ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் இடையூறு: கட்டுப்படுத்த திட்டமிடுமா நகராட்சி நிர்வாகம் அமைச்சரே சொல்லிட்டாரு... இன்னும் ஏன் தயங்குறீங்க! ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் இடையூறு: கட்டுப்படுத்த திட்டமிடுமா நகராட்சி நிர்வாகம்
அமைச்சரே சொல்லிட்டாரு... இன்னும் ஏன் தயங்குறீங்க! ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் இடையூறு: கட்டுப்படுத்த திட்டமிடுமா நகராட்சி நிர்வாகம்
அமைச்சரே சொல்லிட்டாரு... இன்னும் ஏன் தயங்குறீங்க! ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் இடையூறு: கட்டுப்படுத்த திட்டமிடுமா நகராட்சி நிர்வாகம்
அமைச்சரே சொல்லிட்டாரு... இன்னும் ஏன் தயங்குறீங்க! ரோட்டில் சுற்றும் கால்நடைகளால் இடையூறு: கட்டுப்படுத்த திட்டமிடுமா நகராட்சி நிர்வாகம்
UPDATED : ஜூலை 03, 2024 02:54 AM
ADDED : ஜூலை 03, 2024 02:53 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில், கால்நடைகள் சுதந்திரமாக உலா வருவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வளர்ந்து வரும் நகரமாக உள்ள பொள்ளாச்சியில், அதிகளவு வணிக வளாகங்கள் நிறைந்துள்ளன.
இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.இந்நிலையில், நகரில், கால்நடை வளர்ப்போர், மேய்ச்சலுக்காக அவற்றை சுதந்திரமாக விட்டு விடுவதால், ரோட்டில் கூட்டம், கூட்டமாக வலம் வருகின்றன. இதனால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர். வாகனங்கள் தடுமாறி விபத்துக்கு உள்ளாகின்றன.
உணவு தேடல்
ரோட்டில் சுற்றும் கால்நடைகள் போதிய உணவு கிடைக்குமா என தேடலை துவங்கி, ரோட்டோரம் உள்ள புற்கள், உணவு கழிவுகள், காய்கறி கழிவுகள், சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களையும் உட்கொள்கின்றன.
தேவையான உணவு உட்கொண்டதும், ஹாயாக ரோட்டிலேயே படுத்து விடுகின்றன. இதனால், வாகன ஓட்டிகளின் பாடு திண்டாட்டமாகிறது.ரோட்டையே பட்டியாக மாற்றிக்கொள்வதுடன்; கூட்டமாக ரோட்டை கடப்பது போன்ற செயல்களால் வாகன ஓட்டுநர்கள் திண்டாடி வருகின்றனர்.
எச்சரிக்கை என்னாச்சு!
ஆடு, மாடு வளர்ப்போர் தங்களது இடங்களில், நகராட்சி அனுமதி பெற்று பட்டி அமைத்து வளர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், பொது இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில், கால்நடைகள் சுற்றித் திரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என, நகராட்சி சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்பின், எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், ரோட்டில் சுற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த முடியாத சூழலே உள்ளது. இதன் விளைவாக, வாகன ஓட்டுநர்கள் தினமும் சிரமப்படுவதும், தடுமாறி விபத்துக்குள்ளாவதும் தொடர்கதையாகியுள்ளது.
மேலும், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், ஒன்றுக்கு ஒன்று சண்டை போட்டுக்கொண்டு ஓடுகின்றன. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிலை தடுமாறி கீழே விழுவது வழக்கமாகியுள்ளது.
வாகனங்களில் செல்பவர்களை துரத்துவது; நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிப்பது போன்ற செயல்களும் நடக்கின்றன. இதனால், குழந்தைகள் தெருவில் விளையாட முடியாத சூழல் உள்ளது.
அசம்பாவிதம் ஏற்படும்
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மகாலிங்கபுரம், பல்லடம் ரோடு ஐந்து ரோடு சந்திப்பு, நந்தனார் காலனி அருகே உள்ளிட்ட பல இடங்களில், கால்நடைகள் கூட்டமாக உலா வருகின்றன. இவை ரோட்டினை ஆக்கிரமித்துக்கொள்வதால், வாகன ஓட்டுநர்கள் படாதபாடு படுகின்றனர்.
சென்னையில் கால்நடைகளால், மக்கள் பாதிக்கப்பட்டதையடுத்து, அங்கு அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.அமைச்சர் நேரு, சட்டசபையில் ரோட்டில் கால்நடைகள் சுற்றினால், அவற்றின் உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு, கால்நடைகளை பிடித்து ஏலம் விடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.
சென்னையை போன்று சம்பவங்கள் இங்கு நடைபெறாமல் தடுக்க நகராட்சி நிர்வாகம், கால்நடை வளர்ப்போரை அழைத்து கூட்டம் நடத்தி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நடவடிக்கை தேவை
போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகளை ரோட்டில் விட்டால் அவற்றை பிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையை போன்று, இங்கேயும் விதிமுறைகளை கடுமையாக்கி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்கனவே, போக்குவரத்து நிறைந்த நகரமாக உள்ள பொள்ளாச்சியில், கால்நடைகள் உலாவால் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால், அதிகாரிகள் இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.