/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து தொங்குது! குப்பை குவிக்கும் இடமான சமுதாயக்கூடம் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து தொங்குது! குப்பை குவிக்கும் இடமான சமுதாயக்கூடம்
மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து தொங்குது! குப்பை குவிக்கும் இடமான சமுதாயக்கூடம்
மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து தொங்குது! குப்பை குவிக்கும் இடமான சமுதாயக்கூடம்
மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து தொங்குது! குப்பை குவிக்கும் இடமான சமுதாயக்கூடம்
ADDED : ஜூன் 03, 2024 11:36 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், சமுதாய கூட கட்டடம் சிதிலமடைந்து காணப்படுவதுடன், சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு மேம்பாலத்தின் கீழ், சேரன் காலனி உள்ளது. இப்பகுதிக்கு ரயில்வே ஸ்டேஷன் வழியாக உள்ள பாலத்தின் வழியாகவும், கோட்டூர் ரோடு வழியாகவும் வந்து செல்லலாம்.
குடியிருப்புகள் நிறைந்த இப்பகுதியில், மக்களின் வசதிக்காக நகராட்சி சார்பில் பல ஆண்டுகளுக்கு முன், சமுதாய கூடம் கட்டப்பட்டது. வீட்டு விசேஷங்களை நடத்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும், சில ஆண்டுகள் ரேஷன் கடையாகவும் இந்த கட்டடம் செயல்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.
தற்போது, போதிய பராமரிப்பின்றி கட்டடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஜன்னல் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து, எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழும் வகையில் அந்தரத்தில் தொங்கி கொண்டுள்ளன.
கட்டடத்தின் முகப்பு பகுதியில், மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிவதால், எலும்புக்கூடாக கட்டடம் காட்சி அளிக்கிறது. யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு கட்டடத்தின் நிலை மாறியுள்ளது. கிழே விழுந்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், கட்டடத்தின் அருகே மக்கள் செல்வதில்லை.தற்போது, கட்டடம் பராமரிப்பின்றி கிடப்பதால், அதன் முகப்பு மற்றும் பின் பகுதியை மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு சிலர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் உள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'சமுதாய கூட கட்டடம் யாரும் பயன்படுத்த முடியாத நிலைக்கு உருமாறியுள்ளது. கட்டடத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
உருமாறிக்கிடக்கும் கட்டடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், பயனாக இருக்கும். பாழடைந்த கட்டடத்தை இடித்து புதிய சமுதாய கூடம் கட்டினால், இப்பகுதி மக்களுக்கான பயன்பாட்டுக்கு உதவும்,' என்றனர்.
சுகாதாரமே இல்லை!
சமுதாய கூடம் அருகே குப்பை அதிகளவு குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள கழிவுகளால், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. குப்பை கொட்டுமிடமாக உள்ள இந்த இடத்தில், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில், இரும்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, விளையாட்டு திடல் போல பயன்படுத்தப்பட்டது.
தற்போது, அந்த இடம் குப்பை கொட்டுமிடமாக மாறியுள்ளதால், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, குப்பையை அகற்றவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.