Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள்! கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள்! கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள்! கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

வகுப்பறையில் மது அருந்திய மாணவர்கள்! கோவை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

ADDED : ஆக 01, 2024 03:48 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கோவை : கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றில், பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்கள் குளிர்பானத்தில் மதுபானம் கலந்து குடித்துள்ளனர். இது, ஆசிரியர்கள் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டதும், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு 'கவுன்சிலிங்' வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகாமையில் மதுக்கடைகள், மதுக்கூடங்கள் நடத்தக் கூடாது என்கிற அரசின் உத்தரவு அமலில் இருக்கிறது.

அதை மீறி, கோவையில் பள்ளிகள் மற்றும் கோவில்களுக்கு அருகே ஆங்காங்கே மதுக்கடைகள் நடத்தப்படுகின்றன.

போதாக்குறைக்கு தற்போது குடியிருப்பு பகுதிகளில், காலை, 11:00 முதல் இரவு, 11:00 மணி வரை செயல்படும் வகையில், 'எப்எல்2' மதுக்கடைகள் நடத்தப்படுகின்றன. அதேநேரம், பள்ளி சீருடையில் வருவோருக்கு மதுபானங்கள் வழங்கக் கூடாதென மதுக்கடை ஊழியர்களுக்கு கறாரான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி மாணவர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுப்பதற்காக, ஒரு கும்பல் செயல்படுகிறது.

சமீபத்தில், கோவை மாநகராட்சி பள்ளி ஒன்றில், பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவர்கள் சேர்ந்து, உடற்கல்வி வகுப்பு நேரத்தில், வகுப்பறையில் அமர்ந்து, குளிர்பானத்துடன் மதுபானம் கலந்து குடித்தது தெரியவந்தது. அவர்களின் பெற்றோரை வரவழைத்து, 'கவுன்சிலிங்' வழங்கப்பட்டது.

இது தொடர்பான, விசாரணையில் கிடைத்த தகவல்:

சம்பந்தப்பட்ட பள்ளியில், மதுபானம் அருந்திய மூன்று மாணவர்களில் ஒருவர், தனது தந்தை வைத்திருந்த பணத்தில் ரூ.4,000 எடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டதாகவும், நண்பர்கள் மதுபானம் அருந்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இத்தகவலை, பள்ளி ஆசிரியையிடம் மாணவனின் தந்தை கூறியிருக்கிறார். மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், வெளிநபர்கள் மூலமாக மதுபானம் பெற்றதாகவும், குளிர்பானத்தில் கலந்து, உடற்கல்வி வகுப்பு நேரத்தில் அருந்தியதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்களது முன்னிலையில் 'கவுன்சிலிங்' வழங்கப்பட்டது.

'கவுன்சிலிங் அளிக்க குழு'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டதற்கு, ''மாநகராட்சி பள்ளியில் அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என ஆசிரியர்கள் சொல்கின்றனர். இது, மிகவும் 'சென்சிட்டிவ்'வான விஷயம். வீடியோ இருப்பதாகச் சொல்கிறீர்கள்; அதை அனுப்புங்கள். மீண்டும் விசாரிக்கிறேன். மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்வதை தடுக்க, 'கவுன்சிலிங்' வழங்கப்படும்; இதற்கென ஒரு குழு இருக்கிறது. எந்த மாணவனுக்கும் 'டி.சி.,' கொடுத்து, பள்ளியில் இருந்து அனுப்ப மாட்டோம்,'' என்றார்.



பள்ளி அருகில் மதுக்கடை

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு 'கவுன்சிலிங்' வழங்குவது மட்டுமின்றி, அவர்களுக்கு திருட்டுத்தனமாக மதுபானம் விற்பவர்களை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள மதுக்கடைகளை ரோந்து போலீசார் கண்காணித்து, மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பதை ஒழிக்க, காவல்துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us