/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கால்வாய், தடுப்பணை பணியை விரைந்து முடியுங்க! குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல் கால்வாய், தடுப்பணை பணியை விரைந்து முடியுங்க! குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
கால்வாய், தடுப்பணை பணியை விரைந்து முடியுங்க! குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
கால்வாய், தடுப்பணை பணியை விரைந்து முடியுங்க! குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
கால்வாய், தடுப்பணை பணியை விரைந்து முடியுங்க! குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 28, 2024 11:53 PM

பொள்ளாச்சி;'ஆழியாறு பழைய ஆயக்கட்டு தடுப்பணைகள் மற்றும் புதிய ஆயக்கட்டு கால்வாய்களில் புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் அரசகுமார், தாசில்தார்கள் ஜெயசித்ரா, சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் பேசியதாவது: பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் மரங்கள் வெட்டப்பட்டு, நிழற்கூரைகள் அகற்றப்பட்டன. இதனால், மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். மரக்கன்றுகள் நடவும், நிழற்கூரை அமைக்கவும் திட்டமிட வேண்டும். ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்தில் ஐந்து தடுப்பணைகள் பணிகள் மந்தமாக நடக்கின்றன. தண்ணீர் திறப்புக்கு அரசாணை பெற்றும் இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை.
காலம் தாழ்த்தி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் சாகுபடி செய்வதால் உரிய பலன் கிடைக்காத நிலை உள்ளது. பெரியணையில், 19 மதகுகள் உள்ளன; அவற்றை சீரமைத்தால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் செல்லும். பணிகளை விரைந்து முடித்து, தண்ணீர் வழங்க வேண்டும்.
புதிய ஆயக்கட்டு கால்வாய் பணிகளும் மந்தமாக நடக்கிறது. தண்ணீர் நிறுத்தப்பட்டு, நான்கு மாதங்களாகியும், 25 சதவீதம் தான் பணிகள் முடிந்துள்ளன. மழை காலம் துவங்கினால் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். உடனடியாக பணிகளை துவங்கி விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்த வேண்டும்.
பி.ஏ.பி., தண்ணீர் பாயும் விவசாய தோட்டங்களில், 'காயர் பித்' கொட்டுவதை தடுக்க வேண்டும். கால்வாயில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு மனு கொடுத்தும் தீர்வு ஏற்படவில்லை. பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களால், கழிவுநீர் கலந்து பாசன நீர் மாசுபடுவதற்கு தீர்வு காண வேண்டும்.
தமிழக அரசு, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தற்போது அறிவித்துள்ளதை விட அதிகமாக வழங்க வேண்டும்.
ஜமீன் ஊத்துக்குளி பகுதியில், தென்னை மரங்களை வெட்ட வழங்கப்படும் நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை. முறையாக அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணா குளம் ரோடு மிக மோசமாக உள்ளதால், விபத்துகள் சர்வசாதாரணமாக நடக்கிறது.
இவ்வாறு, பேசினர்.
'தினமலர்' செய்தியைசுட்டிகாட்டிய விவசாயி
விவசாயிகள் பேசுகையில், 'வண்டல் மண் எடுக்கும் திட்டத்துக்கு கடந்த, 12ம் தேதி தமிழக முதல்வர் உத்தரவிட்டார். விருப்பம் உள்ளவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்தால் போதும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அதிகாரிகள் இது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போது மழையால், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இனி என்ன செய்வது என தெரியவில்லை.
'தினமலர்' நாளிதழில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அரசு அறிவித்தும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
சப் - கலெக்டர் கூறுகையில், 'முதல்வர் உத்தரவிட்ட நிலையில் அரசாணை வந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.