ADDED : ஜூன் 07, 2024 11:28 PM
அன்னுார்:சர்க்கார் சாமக்குளத்தில் உள்ள, கவையன்புத்துார் தமிழ் சங்கத்தில், 61வது மாத அமர்வு விழா நாளை, 9ம் தேதி நடைபெற உள்ளது.
கோவில்பாளையம் அருகே உள்ள சர்க்கார் சாமக்குளத்தில் கவையன்புத்துார் தமிழ் சங்கம் செயல்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இச்சங்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் மொழியை சிறப்பான முறையில் கற்கவும், கற்கும் ஆற்றலை ஊக்குவிக்கும் வகையில், பேராசிரியர்கள், தமிழ் புலவர்களை அழைத்து சிறப்புரை, பட்டிமன்றம் ஆகியவற்றை நடத்தி வருகிறது.
மேலும், பள்ளிகளில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் சிறப்பாக தமிழ் பேசிய, மாணவ, மாணவிகளை விழாவில் அறிமுகப்படுத்தி, அவர்கள் பேச்சுப் போட்டியில் பேசியதை பேசவும் வைக்கின்றனர். அந்த வகையில் இந்த தமிழ் சங்கத்தின், 61வது மாத அமர்வு விழா, நாளை (9ம் தேதி) சர்க்கார் சாமக்குளம் இன்போ பொறியியல் கல்லூரியில், காலை, 9:30 மணிக்கு நடைபெற உள்ளது.
விழாவுக்கு, பேராசிரியர் சூரிய நாராயணன் தலைமை வைக்கிறார். கணித ஆசிரியை பானுமதி வரவேற்கிறார். விழாவில் பள்ளி ஆசிரியர்களும், கல்லுாரி பேராசிரியர்களும் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்பு பற்றி விளக்கிப் பேச உள்ளனர். தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் சங்கத்தின் தலைவர் பழனிசாமி, செயலாளர் கணேசன், பொருளாளர் தாமோதரசாமி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.