Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 24 மணி நேரமும் சில்லிங் மதுபானம் விற்பனை 3 முறை மனு கொடுத்தும் நடவடிக்கையில்லை

24 மணி நேரமும் சில்லிங் மதுபானம் விற்பனை 3 முறை மனு கொடுத்தும் நடவடிக்கையில்லை

24 மணி நேரமும் சில்லிங் மதுபானம் விற்பனை 3 முறை மனு கொடுத்தும் நடவடிக்கையில்லை

24 மணி நேரமும் சில்லிங் மதுபானம் விற்பனை 3 முறை மனு கொடுத்தும் நடவடிக்கையில்லை

ADDED : ஜூன் 25, 2024 01:46 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி நகரில், 24 மணி நேரமும் சில்லிங் மதுபானம் விற்பனை நடக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பா.ஜ.,வினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார்.

பா.ஜ., நகர செயலாளர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி நகராட்சி அலுவலக ரோடு, ராஜாமில் ரோடு, கோட்டூர் ரோடு பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள், 'பார்'களினால் நடந்து செல்லும் மக்கள், தினமும் பாதித்து வருகின்றனர்.டாஸ்மாக் மதுபான கடைகளில், சில்லிங் முறையில், 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுகிறது.

டாஸ்மாக் கடைகள், பார்களை மூட வேண்டும் என கடந்த, இரண்டு ஆண்டுகளாக மூன்று முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.பொள்ளாச்சியில் இயங்கும் பார்கள், ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகள் நடத்தி வருவதாக தெரியவருகிறது.

தி.மு.க.,வினர் பணம் சம்பாதிப்பதற்காக மதுபான, 'பார்'களை இயக்கி மக்களை மதுவுக்கு அடிமையாக்குவது, அவர்களது குடும்பத்தை சீரழிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

கோட்டூர் ரோடு மதுபானக்கடை அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் தான் பள்ளி மாணவர்கள் காத்திருக்கின்றனர். இங்கு, 'குடி'மகன்கள் அட்டகாசத்தால், பெண்கள், மாணவியர் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இங்கு குற்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் போன்று, பொள்ளாச்சி பகுதியில் நடக்காமல் இருக்க, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய நான்கு தாலுகாக்களில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். 'குடி' பழக்கத்துக்கு அடிமையானவர்கள், 'குடி'யில் இருந்து மீண்டு வர தமிழக அரசு, நல்வாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், பொதுமக்களுடன் இணைந்து அறவழி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பட்டா


மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினர் கொடுத்த மனுவில், 'கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகள், கிராமங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், தினக்கூலிகளாக விவசயம், கட்டட வேலைக்கு சென்று வருகின்றனர்.

கிராம மக்களுக்கு சொந்த வீடுகள் இல்லாமல் வாடகை வீடுகளிலும், கூட்டுக்குடும்பங்களாகவும் வாழ்ந்து வருகின்றனர். எனவே, அந்த குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.

சாக்கடை அடைப்பு


பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி அண்ணா நகர் பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

டி.கோட்டாம்பட்டி அண்ணா நகர் பகுதியில், கடந்த, 75 ஆண்டுகளுக்கு மேலாக, 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் இருந்து கழிவுநீர், மழைநீர் சீராக சென்ற நிலையில், தனியார் ஒருவர் சாக்கடையை அடைத்து மனையிடம் அமைத்தார். நகராட்சியிடம் அனுமதி பெறாமலும், சாக்கடை நீரை திசை திருப்பி ரோட்டில் உள்ள பாலத்தில் இரவோடு இரவாக அடைத்தனர்.

இது குறித்து பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை அதிகரித்து, மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

முதியவர்கள், குழந்தைகள் நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடைபாதை அமைக்கணும்!

பொள்ளாச்சி நகராட்சி முன்னாள் கவுன்சிலர் அய்யப்பன் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி புதிய பஸ்ஸ்டாண்ட் நுழைவு வாயில் பகுதியில் இருந்து, கடைவீதிக்கு செல்லும் ரோட்டின் இருபுறமும், கடைகளுக்கு முன்பாக பாதாள சாக்கடை மேற்பகுதி முழுவதும் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.காந்தி சிலையின் இருபுறமும் அமைந்துள்ள கோவை ரோடு முழுவதும் மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டின் முன்புற நடைபாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகரம் முழுவதும் ஆக்கிரமிப்புகளால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். சப் - கலெக்டர் அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம், நீதிமன்ற வளாகம், போலீஸ் ஸ்டேஷன், தபால் நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் அமைந்துள்ள பகுதியை சுற்றிலும் நடைபாதை அமைக்க வேண்டும். பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக இருக்கும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us