/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பருத்தி விளைச்சலை அதிகரிக்க முயற்சி செய்யணும் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 'சைமா' கோரிக்கை பருத்தி விளைச்சலை அதிகரிக்க முயற்சி செய்யணும் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 'சைமா' கோரிக்கை
பருத்தி விளைச்சலை அதிகரிக்க முயற்சி செய்யணும் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 'சைமா' கோரிக்கை
பருத்தி விளைச்சலை அதிகரிக்க முயற்சி செய்யணும் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 'சைமா' கோரிக்கை
பருத்தி விளைச்சலை அதிகரிக்க முயற்சி செய்யணும் மத்திய ஜவுளித்துறை அமைச்சரிடம் 'சைமா' கோரிக்கை
ADDED : ஜூன் 26, 2024 02:14 AM

கோவை;'புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பருத்தி விளைச்சலை அதிகரிக்க, மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்' என, 'சைமா' தலைவர் சுந்தரராமன் வலியுறுத்தியுள்ளார்.
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, ஜவுளித்துறை பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
நமது நாட்டில் ஓராண்டில் பருத்தி, 323 லட்சம் பேல்களே உற்பத்தியாகிறது. அதிலும், 12 லட்சம் பேல் ஏற்றுமதியாகிறது. 20 முதல், 40 லட்சம் பேல் வரை இறக்குமதியாகிறது. அதனால், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, பருத்தி விளைச்சலை இரட்டிப்பாக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது.
இதுதொடர்பாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் சுந்தரராமன் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
அப்போது, அவர் கூறியதாக தெரிவித்ததாவது:
நமது நாட்டில் பருத்தி விளைச்சல், உற்பத்தி திறன் குறைந்திருக்கிறது. குறைந்தபட்ச நிர்ணய விலை கடந்தாண்டு உயர்த்தப்பட்டது; உற்பத்தியை அதிகரிக்காமல், விலையை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வது தீர்வாகாது. உற்பத்தியை அதிகரித்தால் மட்டுமே, விவசாயிகளின் வருவாய் இரண்டு மடங்காக பெருகும்.
பெரும்பாலான நாடுகளில் ஹெக்டேருக்கு, 1,500 கிலோ பருத்தி விளைவிக்கப்படுகிறது. நமது நாட்டில், 430 - 450 கிலோ மட்டுமே விளைச்சல் கிடைக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, புதிய ரக பருத்தி விளைவிப்பதற்கான தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு விவசாய முறைகள் தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கடந்தாண்டு, மத்திய அரசு நிதியில், 'பைலட்' திட்டமாக, 10 ஆயிரம் ஹெக்டேரில் பருத்தி விளைவிக்கப்பட்டது. அதில், 40 - 60 சதவீதம் வரை, உற்பத்தி திறன் அதிகரித்திருக்கிறது. இந்தாண்டு செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 'டெக்னாலஜி மிஷன் ஆன் காட்டன் - 2' கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.