ADDED : ஜூலை 08, 2024 01:13 AM
'குட்கா' அமோகம்; போலீஸ் மவுனம்
இப்படியே போச்சுனா என்ன ஆகுமோ என, குடிமங்கலம் நால்ரோடு பஸ் ஸ்டாப்பில் இருவர், பெருமூச்சு விட்டபடி பேசத்தொடங்கினர்.
அப்படி என்னப்பா நடக்குது என ஒருவர் கேட்க, 'அட, நம்ம வட்டாரத்துல இருக்குற எல்லா ஊர்லயும், 'குட்கா' உள்ளிட்ட புகையிலை பொருள் தடையில்லாம விக்கறாங்க. பெரியவங்க மட்டுமில்லாம எல்லா வயசுக்காரங்களும் இதை வாங்குறாங்க.
ஏற்கனவே பல புகார் இருந்தும், குடிமங்கலம் போலீஸ் கண்டுக்கல; சில மாசத்துக்கு முன்னாடி, தாராபுரத்துல இருந்து ஒரு ஸ்பெஷல் டீம் வந்து, 'குட்கா' விற்ற நபர்களை கைது செஞ்சாங்க.
பிற மாநில தொழிலாளர்கள் அதிகம் இருக்கற இப்பகுதியில், இளைஞர்களையும் குறி வைச்சு, விற்பனை இலக்கு நிர்ணயிச்சு, எல்லா போதை பொருளையும் விற்கறாங்க.
பெரும்பாலும், தாராபுரம் ஏரியாவுல இருந்துதான் இத்தகைய பொருட்கள் விற்கறதுக்கு கொண்டு வர்றாங்கலாம். இப்படியே போச்சுனா, கிராமத்துல பல பிரச்னைங்க நடக்க வாய்ப்பிருக்கு; போலீஸ்காரங்க அசால்டா இல்லாம கொஞ்சம் ரெய்டு நடத்தி, இதுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கணும்.
மக்கள் அதிகம் கூடுற இடத்துல எல்லாம், கொஞ்சம் கண்காணிக்கணும்; இல்லாட்டி, குற்றங்கள் நடக்குறது அதிகமாயிரும். நம்ம புலம்பறத தவற வேற என்ன செய்ய முடியும்,' என அங்கிருந்து கிளம்பிச்சென்றனர்.
மாணவர்கள் எதிர்காலம் என்னாகுமோ!
பொள்ளாச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர், 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். என்ன விஷயம் என, விசாரித்தேன்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை உள்ளடக்கிய அரசு பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ைஹடெக் லேப்) இருக்குங்க. தற்போது, ெஹப்ரான் நிறுவனம் வாயிலாக பணியாளர்களை நியமிச்சிருக்காங்க.
கல்வி உதவித்தொகை சார்ந்த பதிவுகள், மாணவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு விபரங்களை, ஆசிரியர்கள் உதவியுடன் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்வது இவர்களது பணியாகும். இவர்களுக்கு, வருகைப்பதிவும், பணி நியமன ஆணையும் கிடையாது.
அந்த நிறுவனம், இவங்களை 'ஆன்லைன்' வாயிலாக தேர்வு எழுத வச்சு, தேர்வு பண்ணியிருக்காங்க. ஆனா, தேர்வில், 50 வினாக்களுக்கு பதிலாக, 20 வினாக்களே இவங்களுக்கு கொடுத்திருக்காங்க. தேர்விலேயே குளறுபடி நடந்திருக்கு. பணி நியமனம் செய்யப்பட்டவர்கள், திறமையானவர்களா, மாணவர்களுக்கு உதவும் அளவுக்கு அனைத்து விபரங்களும் தெரிந்தவர்களா என்பது தெரியாதுங்க.
ஆனா, இவங்க தான், மாணவர்களுக்கு 'ஆன்லைன்' சார்ந்த தேர்வுக்கு பயிற்சி அளிக்க போறாங்க. இதுல, ஏதாவது பிரச்னை ஏற்பட்டா என்ன பண்றதுனு தெரியல, என, புலம்பினர்.
சார்--பதிவாளர் ஆபீசில் முறைகேடு
கணியூரில் பத்திரப்பதிவுக்கு வந்திருந்த சில விவசாயிகள், 'பணம் கொடுத்தா, சார் - பதிவாளர் ஆபீஸ்ல என்ன வேணும்னாலும் நடக்கும். எந்த ஆவணத்தையும் அதிகாரிகள் முறையான ஆய்வுக்கு உட்படுத்தறதில்லை,' என்றனர்.
என்ன நடந்ததுனு கேட்டபோது, கணியூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில், உயில் ஆவணம் பதிவு இருந்தும், மேல் உரிமை மட்டுமே அனுபவிக்க உரிமையுள்ளவர், மற்ற இரு நபர்களுக்கு தெரியாமல், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை விற்பனை செய்திருக்காரு.
மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ள நிலையில், பெரும் தொகை அதிகாரிகளுக்கு கை மாறியிருக்கு. இதில், குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி நபர்கள் மூன்று பேர், முறைகேடாக சொத்தை விற்பனை செய்து விளையாடியிருக்காங்க. இதை கண்டித்து தான், விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியிருக்காங்க.
முறையாக வழக்கு பதிவு செய்து விசாரித்தால், அதிகாரியும், ஆளும்கட்சியினரும் சிக்குவாங்க. அதனால, சமாதானம் பேசி பிரச்னையை முடிக்க பார்க்கறாங்க, என்றனர்.
ஆளுங்கட்சிக்காரங்களே அதிருப்தி
உடுமலை ஒன்றியத்தை பொருத்த வரை எல்லாமே இருக்கு... ஆனா, இல்லைங்கற கதையாத்தான் இருக்கு, என, ஆளுங்கட்சி நண்பர் ஒருவர் விளையாட்டு துறை தகவல் ஒன்றை பகிர்ந்தார்.
முதல்வரின் வாரிசும், அமைச்சருமான உதயநிதி, மாணவர்கள் விளையாட்டு துறையில ஜொலிக்கணும், விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தணும்னு மேடைக்கு மேடை பேசுறாரு. ஆனா, கள நிலவரம் அப்படி இல்லீங்க. ஏட்டு சுரைக்காய், சமையலுக்கு உதவாது என்ற கதையா இருக்கு.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஊரக விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்த, 32 வகையான விளையாட்டு உபகரணங்கள் கிராமங்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனா, பயிற்சி செய்வதற்கு பெரும்பாலான கிராமத்துல மைதான வசதியே இல்லை. அந்தந்த உள்ளாட்சியில் அதிகாரத்தில் இருக்கும் ஆளுங்கட்சி பிரமுகர்கள், விளையாட்டு உபகரணங்களை வாங்கி சென்று வீட்டில் வைத்திருக்கறாங்க. இந்த திட்டமே கண்துடைப்பா இருக்கு.
இப்படி இருந்தால், கிராமத்துல இருந்து விளையாட்டு வீரர்கள் எப்படி ஜொலிப்பாங்க. விளையாட்டு துறை எப்படி வளரும். களத்துல இருக்கற ஆளுங்கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் அக்கறையிருந்தா, மைதானம் ஏற்படுத்த முயற்சி செய்வாங்க. ஆனா, இங்க எல்லாமே, 'கலெக் ஷன், கரப்ஷன்' ஆக இருக்கே, என, ஆதங்கப்பட்டார்.
ரேஷன் கடை திறப்பு விழாவுல மோதல்
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தேன். அங்கு, தி.மு.க., -- அ.தி.மு.க., பிரச்னை குறித்து இருவர் பேசிகிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.
தேவராயபுரம் ஊராட்சில கடந்த வாரம் புதுசா ரேஷன் கடை திறப்பு விழா நடந்துச்சு. கடையை திறக்க, பொள்ளாச்சி எம்.எல்.ஏ., ஜெயராமனுக்கு அழைப்பு கொடுக்கலாம்னு, அ.தி.மு.க.,வை சேர்ந்த ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் ஆசைப்பட்டாங்க.
ஆனா, லோக்சபா தேர்தலில் ஜெயித்த தி.மு.க., எம்.பி., ஈஸ்வரசாமியை அழைத்து வந்து, ரேஷன் கடையை தி.மு.க., காரங்க திறந்துட்டாங்க. அந்த நிகழ்ச்சியில ஊராட்சி தலைவர் கலந்துக்கவில்லை.
ரேஷன் கடை திறப்பு விழாவுக்கு போகலையானு, ஊராட்சி தலைவர் கிட்ட கேட்டதுக்கு, தி.மு.க.,காரங்க அடம்பிடிச்சு, நாங்க தான் திறப்போம்னு, எம்.பி., கூட்டிட்டு வந்து திறப்பு விழா நடத்துனாங்க. இதனால, நான் கலந்துக்கலைனு சொன்னாரு.
தி.மு.க.,காரங்க அட்ராசிட்டியை பார்த்து, ஊருல இருக்கற அ.தி.மு.க.,காரங்க அப்செட் ஆயிட்டாங்கனு சொன்னார். அதுக்கு மற்றொருவர், தி.மு.க., என்றாலே அட்ராசிட்டி தான்னு சொல்லிட்டு, அங்கிருந்து கிளம்பினாங்க.