Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜமாபந்தியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்! பொள்ளாச்சி - 788; உடுமலை - 1,036 மனுக்கள்

ஜமாபந்தியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்! பொள்ளாச்சி - 788; உடுமலை - 1,036 மனுக்கள்

ஜமாபந்தியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்! பொள்ளாச்சி - 788; உடுமலை - 1,036 மனுக்கள்

ஜமாபந்தியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்! பொள்ளாச்சி - 788; உடுமலை - 1,036 மனுக்கள்

ADDED : ஜூன் 21, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
- நிருபர் குழு -

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நடந்த, ஜமாபந்தியில், 788 மனுக்கள் பெறப்பட்டன.

பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாக்களில் நேற்று இரண்டாம் நாள் ஜமாபந்தி நடந்தது.

பொள்ளாச்சி தாலுகாவில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. வருவாய் கிராமங்கள் குறிப்பிட்டு வைக்கப்பட்ட நில அளவை கம்பிகளை ஜமாபந்தி அலுவலர் பார்வையிட்டார். தாசில்தார் ஜெயசித்ரா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பொள்ளாச்சி வடக்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட மக்கள், பல்வேறு பிரச்னைகள், அரசு நலத்திட்ட உதவி கேட்டு மனு கொடுத்தனர். ஜமாபந்தியில், பட்டா மாறுதல் - 34, முதியோர் உதவித்தொகை - 9, இலவச வீட்டு மனைப்பட்டா கோருதல் - 37 உட்பட, மொத்தம், 181 மனுக்கள் பெறப்பட்டன.

தெற்கு உள்வட்டம்


பொள்ளாச்சி தெற்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் கோட்டாம்பட்டி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி கிராமங்களுக்கும் வரும், 25ம் தேதி ஜமாபந்தி நடக்கிறது.

ஆனைமலை


ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் நேற்று மனு கொடுத்தனர்.

அதில், பட்டா மாறுதல் - 14, முதியோர் உதவித்தொகை - 18, நில அளவை - 10 உட்பட, மொத்தம், 121 மனுக்கள் பெறப்பட்டன. அதில், மூன்று மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதம் உள்ள, 118 மனுக்கள் மீது பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும், 25ம் தேதி கோட்டூர் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.

கிணத்துக்கடவு


கிணத்துக்கடவு, தாலுகா அலுவலகத்தில் நேற்று இரண்டாம் நாள் ஜமாபந்தி நடந்தது. ஜமாபந்தி அலுவலர் தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

நேற்று, கிணத்துக்கடவு உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் மனு அளித்தனர். இதில், மொத்தம், 489 மனுக்கள் பெறப்பட்டது. வரும் 25ம் தேதி கோவில்பாளையம் உள்வட்டத்துக்கு ஜமாபந்தி நடக்கிறது.

உடுமலை


உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், இரு நாட்கள் நடந்த ஜமாபந்தியில், 1,036 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

உடுமலை தாலுகா அலுவலகத்தில், இரண்டாம் நாளான நேற்றும் ஜமாபந்தி, கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில், குறிச்சிக்கோட்ட உள் வட்ட கிராமங்களுக்கு நடந்தது. இதில், இலவச வீட்டு மனை பட்டா கோரி, 69 மனுக்கள், நத்தம் பட்டா மாறுதல், 27 உட்பட, 216 மனுக்கள் பெறப்பட்டன. நேற்று முன்தினம், 143 மனுக்கள் பெறப்பட்டன.

மடத்துக்குளம்


மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில், மடத்துக்குளம், துங்காவி உள்வட்ட கிராமங்களுக்கு, இரு நாட்கள் ஜமாபந்தி நடத்தப்பட்டு, நேற்று நிறைவு செய்யப்பட்டது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.

இதில், பட்டா மாறுதல் -- 92, வீட்டு மனை பட்டா - 222, மகளிர் உரிமைத்தொகை - 180, நில அளவை - 56, முதியோர் உதவித்தொகை - 44 என, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 677 மனுக்கள் பெறப்பட்டன.

கனிமவள கொள்ளை!

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், சட்ட விரோத கனிமவள கொள்ளை நடக்கிறது. உரிய அனுமதியின்றி, குவாரிகள் செயல்பட்டு வருவதோடு, கேரள மாநிலத்துக்கு கடத்தப்படுகிறது.எனவே, கனிமவளக் கொள்ளை குறித்து, அளவீடு செய்து, உரிய அபராதம் வசூலித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளபாளையம் ஊராட்சியில், விவசாய நிலத்தில், மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் தொழிற்சாலையை மூட வேண்டும். உடுமலை பகுதிகளில் போலி மது, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.



அரசு நிலத்தை மீட்கணும்!

தமிழ் மாநில விவசாயிகள் சங்கம் சார்பில், தாலுகா செயலாளர் ரமேஷ் கொடுத்த மனுவில், 'உடுமலை, எலையமுத்துார் கிராமத்தில், பஞ்சமி நிலத்தை போலி ஆவணம் வாயிலாக அபகரித்து, அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தும், புத்தர் கோவில் கட்டப்பட்டுள்ளது.புகார் அடிப்படையில், அதிகாரிகள் ஆய்வு செய்து, தடை விதித்தும், கோவில் கட்டப்பட்டுள்ளது. அரசு நிலத்திலுள்ள கட்டடங்களை அகற்ற வேண்டும். அதே போல், எலையமுத்துார் கிராமத்தில் கண்டிசன் பட்டா நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக அபகரிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us