/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி மனுக்களுடன் திரண்ட மக்கள் மேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி மனுக்களுடன் திரண்ட மக்கள்
மேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி மனுக்களுடன் திரண்ட மக்கள்
மேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி மனுக்களுடன் திரண்ட மக்கள்
மேட்டுப்பாளையத்தில் ஜமாபந்தி மனுக்களுடன் திரண்ட மக்கள்
ADDED : ஜூன் 25, 2024 08:39 PM
மேட்டுப்பாளையம்:ஜமாபந்தியில் கோரிக்கை மனுக்கள் கொடுக்க, ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்ததால், அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள் திணறினர்.
மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி நடந்து வருகிறது. நேற்று மூன்றாவது நாளாக நெல்லித்துறை, ஓடந்துறை, தேக்கம்பட்டி, சிக்கதாசம்பாளையம், சிறுமுகை, ஜடையம்பாளையம் ஆகிய ஆறு கிராமங்களுக்கு ஜமாபந்தி நடந்தது.
கோவை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை, வருவாய் அலுவலர் ஜீவா, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். ஆறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கோரிக்கை மனுக்களை கொடுத்து அலுவலரிடம் டோக்கன் பெற்றனர்.
கிராமம் வாரியாக, பொதுமக்கள் வரிசையில் நின்று கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதி, சிக்கதாசம்பாளையம் கிராமத்திற்கு உட்பட்டதால், நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஏராளமானவர்கள் கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்தனர். ஜமாபந்தியில் மனுக்களை கொடுக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்ததால், அவர்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்ட போலீசார், வருவாய்த் துறையினர் திணறினர்.
நேற்று நடந்த ஆறு கிராமங்களுக்கான ஜமாபந்தியில், 1,153 பேர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதில் இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாறுதல் ஆகிய கோரிக்கை மனுக்கள் அதிக அளவில் இருந்தன.
இன்று, இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம் ஆகிய ஐந்து கிராமங்களுக்கான ஜமாபந்தி நடக்கிறது.