/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொள்முதல் செய்த கொப்பரைக்கு பணம் கொடுங்க! சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா கொள்முதல் செய்த கொப்பரைக்கு பணம் கொடுங்க! சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
கொள்முதல் செய்த கொப்பரைக்கு பணம் கொடுங்க! சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
கொள்முதல் செய்த கொப்பரைக்கு பணம் கொடுங்க! சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
கொள்முதல் செய்த கொப்பரைக்கு பணம் கொடுங்க! சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
ADDED : ஜூலை 26, 2024 01:13 AM

பொள்ளாச்சி:'மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில், கொள்முதல் செய்த கொப்பரைக்கு, 'நாபிட்' நிறுவனம் உடனடியாக நிலுவை தொகையை வழங்க வேண்டும்' என, தென்னை விவசாயிகள், பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில், 10 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், 31,500 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் கட்டமாக, தமிழகத்தில் மார்ச் முதல் ஜூன் வரை கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
கொள்முதல் செய்த கொப்பரைக்கு, நிலுவை தொகை வழங்க வேண்டுமென, பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த விவசாயிகள் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யாவிடம் மனு கொடுத்தனர்.
விவசாயிகள் பேசியதாவது:
மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ், வேளாண் வணிகத்துறை சார்பில், கோவை மாவட்டத்தில், 11,584.45 மெட்ரிக் டன் கொப்பரையை, 8,175 விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. கிலோ 111.60க்கு கொள்முதல் செய்த கொப்பரையை, 'நாபிட்' நிறுவனம் இருப்பு வைத்துள்ளது.
அதில், இரண்டு மாதங்களாக, 4,200க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, கொப்பரை கொள்முதலுக்கு, 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிலுவை உள்ளது. ஏற்கனவே கொப்பரை உற்பத்தி செய்வதற்கு பருவநிலை மாற்றத்தின் காரணமாக, ஒரு மாதத்துக்கும் மேலானது. கொள்முதல் கொப்பரைக்கு இரண்டு மாதங்களாக பணமும் வராததால், விவசாயிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.
வங்கிகளில் பெற்ற கடனுக்கு தவணை செலுத்த முடியாமலும், குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாமலும், விவசாய பணிகளுக்கு பணமின்றியும் திக்குமுக்காடுகிறோம்.
வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தும், 'நாபிட்' நிறுவனம், நிலுவை தொகையை வழங்கவில்லை. உடனடியாக தென்னை விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், கொள்முதல் செய்த கொப்பரையை இப்போது விற்பனை செய்தால், மார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவு ஏற்படும். அதனால், விற்பனை செய்வதை கைவிட வேண்டும்.
இவ்வாறு, பேசினர்.
இதையடுத்து பேசிய சப்-கலெக்டர், ''நாபிட் அதிகாரிகளிடம் பேசி, ஒரு வாரத்துக்குள் முழு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். அதன்பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.