/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஞ்சாயத்துத் தலைவர்கள், செயல் அலுவலர்களுக்கு உச்ச அதிகாரம் லஞ்சத்துக்காக விதிகளை மீறி சான்றுகள் விநியோகம்! பஞ்சாயத்துத் தலைவர்கள், செயல் அலுவலர்களுக்கு உச்ச அதிகாரம் லஞ்சத்துக்காக விதிகளை மீறி சான்றுகள் விநியோகம்!
பஞ்சாயத்துத் தலைவர்கள், செயல் அலுவலர்களுக்கு உச்ச அதிகாரம் லஞ்சத்துக்காக விதிகளை மீறி சான்றுகள் விநியோகம்!
பஞ்சாயத்துத் தலைவர்கள், செயல் அலுவலர்களுக்கு உச்ச அதிகாரம் லஞ்சத்துக்காக விதிகளை மீறி சான்றுகள் விநியோகம்!
பஞ்சாயத்துத் தலைவர்கள், செயல் அலுவலர்களுக்கு உச்ச அதிகாரம் லஞ்சத்துக்காக விதிகளை மீறி சான்றுகள் விநியோகம்!
ADDED : ஜூன் 24, 2024 10:50 PM
-நமது நிருபர்-
அரசின் விதிகளை மீறி, கோவை மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களிலும், பேரூராட்சிகளிலும் மின் இணைப்புப் பெறுவதற்கான கட்டட நிறைவுச் சான்று வாரி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டதன்பேரில், 2019ல் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் வெளியிடப்பட்டன. அதன்படி, 12 மீட்டருக்கு அதிகமான உயரம், 8072 சதுரஅடிக்கு மேற்பட்ட குடியிருப்பு, மூன்றுக்கும் அதிகமான வீடுகள் கொண்ட ஒரே கட்டடத்துக்கு, கட்டட நிறைவுச் சான்று அவசியம்.
இந்த சான்று இல்லாவிட்டால், மின்சாரம், குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கக்கூடாது என்பதே அந்த விதிமுறை. இப்போது இதில் மாற்றம் செய்து, 2500 சதுரஅடி இடத்தில், 3500 சதுர அடி வரை கட்டும் கட்டடங்களுக்கும், எட்டு சமையலறை வரையிலான கட்டடங்களுக்கும் கட்டட அனுமதியும், கட்டட நிறைவுச் சான்றும் தேவையில்லை என்று, சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது எப்போது நடைமுறைக்கு வருமென்று தெரியவில்லை. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, இந்த கட்டட நிறைவுச் சான்று பெற முடியாமல், ஏராளமான கட்டடங்களுக்கு மின் இணைப்பு, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்பு கிடைக்கவில்லை. மாநகரப்பகுதிக்குள் இந்த சான்று இல்லாமல், எந்தவிதமான இணைப்பும் தரப்படுவதில்லை.
விளையாடுகிறது லஞ்சம்
அதே நேரத்தில், கிராம பஞ்சாயத்துத் தலைவர்களும், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களும், வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாக மாறி, அனைத்து விதமான விதிமீறல் கட்டடங்களுக்கும் லஞ்சம் வாங்கிக் கொண்டு, சான்றுகளை வாரி வழங்கியுள்ளனர். அதன் அடிப்படையில் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துகள் மற்றும் பேரூராட்சிகளில் வழங்கப்பட்டுள்ள கட்டட நிறைவுச் சான்றுகள் குறித்து, கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், ஏராளமான தகவல்களை வாங்கியுள்ளது.
அதில் சான்று வழங்குவதில் மட்டுமின்றி, கட்டட அனுமதி வழங்கியிருப்பதிலும் எக்கச்சக்க விதிமீறல்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
உதாரணமாக, இரண்டாயிரம் சதுரஅடி பரப்புக்கு அதிகமான வணிகக் கட்டடங்களுக்கு, அனுமதி வழங்கும் அதிகாரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு இல்லை; ஆனால் ஒரே கட்டடத்துக்கு இரண்டாயிரம் இரண்டாயிரமாகப் பிரித்து, தனித்தனி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம்.
அதேபோல, ஒவ்வொரு தளத்திலும் இரண்டாயிரம் சதுர அடி பரப்பிலான கட்டடத்துக்கும் தனித்தனியாக, அதுவும் ஒரே நாளில் கட்டட அனுமதி தரப்பட்டுள்ளது.
சில கட்டடங்களுக்கு, வரைபட அனுமதி, திட்ட அனுமதி எதுவுமே இல்லாமலே கட்டட நிறைவுச் சான்று கொடுக்கப்பட்டுள்ளது. திட்ட அனுமதியைக் குறிப்பிடும் பகுதி, காலியாக விடப்பட்டிருப்பது, இதை உறுதி செய்வதாகவுள்ளது.
பல சான்றுகளில், வரி விதிப்பு தேதி, சான்று விநியோகத் தேதி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. அதை விடக் கொடுமையாக, கட்டட அனுமதி தேதியும், கட்டட நிறைவுச்சான்று தேதியும் ஒரே நாளாகவுள்ளன. சில சான்றுகளில் வரி விதிப்பு மட்டுமே, சான்று தருவதற்கான ஆதாரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றுகள் எதையும் சரி பார்க்காமல், மின் வாரியத்தினரும் மின் இணைப்புகளைக் கொடுத்துள்ளனர்.
இதுபற்றி விசாரித்தால், இந்த சான்றுகள் வழங்குவதில் நடந்துள்ள முறைகேடுகள், பரிமாறப்பட்டுள்ள லஞ்சம் அனைத்தும் தெரியவரும்.