ADDED : ஜூலை 07, 2024 01:44 AM
கோவை:மாநிலம் முழுவதும், போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை சப்ளை செய்த முக்கிய குற்றவாளியை, போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகரில் சமீபகாலமாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆன்லைன் வாயிலாக வெளிமாநிலங்களில் இருந்து மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதம், கவுண்டம்பாளையம், கரும்புகடை உள்ளிட்ட பகுதிகளில் வலி நிவாரணி மற்றும் மயக்க மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த கும்பலை கைது செய்தனர்.
குறிப்பாக, கரும்புக்கடை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த நான்கு பேர் மற்றும் இவர்களுக்கு மாத்திரைகளை வினியோகித்த, பிரவீன் ஷெட்டி, 36 என்பவரை கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியை, சேர்ந்த பிரவீன் ஷெட்டி, அதே பகுதியை சேர்ந்த வசந்த் ஷெட்டி, 69 என்பவரின் மருந்துக்கடையில் பணிபுரிந்தார்.
வசந்த் ஷெட்டி, மும்பையை சேர்ந்த சூப்பர் ஸ்டாக்கிஸ்ட், ராஜேஷ் வாயிலாக மாத்திரைகளை வாங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், அதிக விலையில், விற்பனை செய்தது தெரிந்தது.
வசந்த் ஷெட்டியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். கர்நாடகா ஹூப்ளியில் மறைந்து இருந்த, வசந்த் ஷெட்டியை தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை கோவை அழைத்து வந்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'வசந்த் ஷெட்டியின் அறிவுறுத்தலின் பெயரிலேயே பிரவீன் ஷெட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வலி நிவாரணி மாத்திரைகளையும், ஒரு சில தடை செய்யப்பட்ட மாத்திரைகளையும், விற்பனை செய்துள்ளார். வசந்தஷெட்டி ஹூப்ளியில், மருத்து விற்பனை கடை, நிறுவனங்களை நடத்தி, அப்பகுதியில் தொழில் அதிபர் போல் தன்னை காட்டிக் கொண்டுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாத்திரைகள் விற்பனைகள் செய்யப்பட்டுள்ளன. இம்மாத்திரைகளின் விலை, ரூ.14 தான். ஆனால், இவர்களுக்கு ரூ.60 க்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.
அதை இவர்கள் ரூ.300க்கு விற்பனை செய்துள்ளனர். இவர்களுக்கு இம்மாத்திரைகளை வழங்கிய நபரையும் தேடி வருகிறோம்' என்றனர்.