Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூடிய வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்கணும்! சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்

மூடிய வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்கணும்! சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்

மூடிய வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்கணும்! சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்

மூடிய வடுகபாளையம் ரயில்வே கேட்டை திறக்கணும்! சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்

ADDED : ஜூலை 30, 2024 02:11 AM


Google News
Latest Tamil News
பொள்ளாச்சி:'வடுகபாளையம் ரயில்வே கேட் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமை வகித்தார்.

பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் கடந்த, இரண்டாண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த வேண்டிய இருசக்கர வாகனங்கள் முடங்கியுள்ளன. இவை, அனைத்தும் துருப்பிடிக்க துவங்கிவிட்டன. பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த வாகனங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.

ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி காந்திநகரில், 460 வீடுகள் உள்ளன. இங்கு பருவமழையால் ஆறு வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. இதனால், மக்கள் அரசு அலுவலக கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே, சேதமடைந்த வீட்டை பராமரிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக - கேரளா ஒப்பந்தப்படி, பி.ஏ.பி., திட்டத்தில் கேரளா அரசு இடைமலையாறு அணையை கட்டிய பின் தமிழகத்தில் நல்லாறு, ஆனைமலையாறு அணைகளை கட்டலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசு, 1985ம் ஆண்டு இடைமலையாறு அணையை கட்டி விட்டது. ஆனால், நல்லாறு, ஆனைமலையாறு அணை திட்டத்தை விரைந்து செயல்படுத்தினால், தண்ணீர் வீணாகாமல் சேமித்து பயன்படுத்த முடியும். மேலும், காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பி.ஏ.பி., தொகுப்பு அணைகளை பராமரிக்கவும், துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளுக்கு தடை நீங்குமா?


நாடார் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது, 'தமிழகத்தில் கள் இறக்குவதற்கு தடை, 1987ம் ஆண்டு முதல் உள்ளது. கள் இறக்குவதை தவிர வேறு தொழில் தெரியாததால் கேரளா, மைசூரு, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்று தொழில் செய்து தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். பல மாநிலங்களுக்கு இடம் பெயருவதால் குழந்தைகள் சரியாக படிக்க வைக்க முடியவில்லை.

பனை மரங்களில் இருந்து பதநீர், கள் இறக்குவதால் நமது தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தை வெட்டுவதிலிருந்து தடுத்து, லாபம் தரும் தொழில் செய்ய முடியும். எனவே, தமிழக அரசு, கள் இறக்குவதற்கு அனுமதி அளித்தால் பயனாக இருக்கும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.

தடுப்பு அகற்றணும்


பா.ஜ., தெற்கு ஒன்றியம் சார்பில் அளித்த மனுவில், 'பொள்ளாச்சி - உடுமலை ரோடு, மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை கடந்த, ஏழு ஆண்டுகளாக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது அங்கு நடந்து செல்வோர், வாகனத்தில் செல்வோருக்கு இடையூறாக அந்த தடுப்பு உள்ளது. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இரும்பு தடுப்புகளை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.

கேட்டை திறங்க!


வலிமை குடியிருப்போர் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில், 'பொள்ளாச்சி வடுகபாளையம் ரயில்வே கேட் மூடப்பட்டுள்ளதால், இவ்வழித்தடத்தை பயன்படுத்தி வந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

மேலும், பி.கே.டி., பள்ளி அருகே வந்து சுரங்கபாதை வழியாக வடுகபாளையம் செல்லும் வழித்தடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. எனவே, மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us